பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தமிழ்நாடும் மொழியும்


திருக்குறளை மேலை நாட்டாரும் படித்து இன்புற வேண்டும் என்ற பேரார்வத்தால் திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்க மான விரிவுரை ஒன்று எழுதத் தொடங்கினர். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. ரேனியசு ஐயர் என்பவர் தமிழ் மொழிக்குப் பேச்சாலும் எழுத்தாலும் பெருந் தொண்டு புரிந்தவருள் ஒருவராவர்.

முற்காலத்தில் சமணப் புலவர்கள் நிகண்டு நூல்கள் இயற்றியதைப் போன்றே பிற்காலத்தில் கிறித்தவப் புலவர்கள் நமக்கு அகராதி நூல்கள் தொகுத்து உதவினர். இத்தகைய நூலை முதன் முதலில் தமிழகத்திற்கு அளித்த பெருமை சதுர அகராதியை இயற்றிய வீரமாமுனிவரையே சாரும். இதன் பின்னர் பாப்ரீசியர் என்பவரால் விரிவான அகராதி ஒன்று வெளிக்கொணரப்பட்டது. அடுத்து ராட்லர், டெய்லர் என்போரது முயற்சியால் 1400 பக்கங்கள் கொண்ட பேரகராதி ஒன்று வெளிவந்தது. இது வெளி வந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பெர்சிவல் போன்ற பல அறிஞர் பலகாலமாகத் திரட்டியவற்றை வின்சுலோ என்பவர் வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் பணியைத் தொடங்கிய பெருமை சாந்தலர் என்பவருக்கே உரியதாகும்.

தமிழ்நாட்டுப் பழமொழிகள் அனைத்தையும் திரட்டித் தந்த பெருமையும் மேலை நாட்டு நல்லறிஞரையே சாரும் பெர்சிவல், லாசரசு ஐயர் என்ற இரு பெரியவர்களும் தமிழ் நாட்டில் வழங்கிய பழமொழிகளை எல்லாம் சேகரித்துப் பெரும் நூலாக வெளியிட்டனர். இவ்வாறு சொல்லாலும் செயலாலும் கிறித்தவத் தொண்டர்கள் தமிழ் வாழ, வளர வழி செய்தனர்.