பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ் நாடும் மொழியும்


ஆராய்ச்சிகள் அவர் கருத்தைப் பொய்யாக்கிவிட்டன. பழைய கற்காலக் குகை ஓவியங்கள் ரெய்கார் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள சிங்கன்பூரில் (Singhanpur) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தகைய குகை ஓவியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் வகையான ஓவியம் வேட்டைத் தொழிலைப் பற்றியதாகும். இரண்டாம் வகையான ஓவியம் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மூன்றாவது வகையான ஓவியம் விலங்குகளைப் பற்றியதாகும். இவ்வோவியங்களிலே குறிப்பிடத்தகுந்தது பொங்கும் உணர்ச்சியே. ஒவ்வொரு ஓவியமும் உயிர் ஓவியமாகும். நான்காவது ஓவியம் சித்திர எழுத்துக்களைக் கொண்டதாகும். இச் சித்திரங்கள் எகிப்து நாட்டுப் பானை முதலியவற்றில் வரைந்துள்ள சித்திரங்களை ஒத்திருக்கின்றன.

பழைய கற்கால மக்கள் எந்த அளவுக்குச் சமயவுணர்ச்சி யுடையவர்களாக இருந்தார்கள் என்பதை அறியப் போதுமான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. பண்டை மக்களின் சவத் தாழிகளோ, மயானக் கரைகளோ தென்படவில்லை. இதிலிருந்து அவர்கட்கு இறந்த பின்றை உயிர் வாழும் என்பதிலே நம்பிக்கை இல்லை என நாம் அறியலாம். ஆனால் இயற்கையில் அம்மனிதன் நம்பிக்கை உடையவன் என்பது மட்டும் ஒருவாறு தெரிகிறது. தன்னை இயக்கும் சக்தி ஒன்று உலகில் உண்டு என்பதைப் பண்டை மக்கள் அறிந்திருந்தனர். இவ்வித உணர்வு தான் பழைய கற்காலத்திலே பரவி இருந்ததே தவிர வேறு கடவுள் உருவங்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆனால் தேவி வணக்கமும் நில வணக்கமும் பண்டைய மனிதன் வழக்கத்தில் இருந்தன என்பது தெரிகிறது. மாக்களினின்றும் நோயினின்றும் தம்மைக் காக்குமாறு அன்னையை அம்மக்கள் வேண்டினர் போலும். நாளாக ஆக இவ்வுணர்வு பெருக, பரவ,