பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தமிழ் நாடும் மொழியும்


னர். புதிய கற்கால மனிதன் தன் எதிரே உள்ள ஆற்றைக் கண்டான்; ஊற்றைக் கண்டான்; கடலைக் கண்டான்; பல வகை மண்களைக் கண்டான்; காட்டையும் மேட்டையும் கண்டான். அவன் உள்ளத்திலே பொங்கிய அழகுணர்ச்சிகளைக் கல்லிலும், பாண்டங்களிலும் பல்வகை மண்களாலும் இலைச்சாறாலும் வெளிப்படுத்தினான். பலவகையான மண்பாண்டங்கள் செய்தான். அவற்றிலே ஓவியங்களைப் பல வண்ணத்தால் தீட்டினான். மஞ்சள், சிவப்பு, பழுப்பு, நீலம் ஆகிய பலவகை வண்ணப் பொருட்களைத் தூளாக்கிப் பலவகைப் பாண்டங்களைச் செய்தான். இதே போலப் பலவகைக் கற்களைக் கொண்டு வந்து இடித்து மாவாக்கிக் குகைகளின் மேற்சுவர்களில் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டினான். ஓவியந் தீட்டப்பட்ட வளைகளும், பாண்டங்களும் இன்ன பிற பொருட்களும் பல இடங்களில் கிடைத்துள்ளன. கோலம் போடல் இப்புதிய கற்காலத்தில் தோன்றிய வழக்கமாகும்.

பழைய கற்கால மனிதன் இறந்தவரை வீசி எறிந்தான். புதிய கற்கால மனிதனோ இறந்தவரை அமர்ந்த நிலையில் தாழியில் புதைத்தான். தாழியுள் மணல், அரிசி, இறந்தவர் பயன்படுத்திய பல்வகைக் கருவிகள் முதலியனவும் வைக்கப்பட்டன. இத்தகைய பொருட்களை நிறையப் போட்டவுடன் தாழி மண் மூடியால் மூடப்பட்டு, பிறகு ஒரு குழியில் வைக்கப்படும். அக்குழி அதன் பின்னர் ஒரு கற்பலகையால் மூடப்படும். இதோடு நின்றுவிடாது மறுபடியும் மணலிடப்பட்டு மற்றொரு முட்டை வடிவக் கற்பலகை அம்மணல் மீது வைக்கப்படும். அதன் பின்னர் அதனைச் சுற்றிக் கற்கள் ஒரு முழம் அளவிற்கு நடப்படும். இத்தகைய தாழிகள் உடைய இடங்கள் புதுக்கோட்டைப் பகுதியில் நிறைய உள. தாழியின் உயரம் 4 அடி; அகலமோ 3 1/2 அடி. மற்றும் கோவை, பெல்லாரி போன்ற மாவட்டங்களில் சுமைதாங்கி போன்ற உருவில் அமைந்த கல்லறைகள் பல உள.