பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. சங்க காலம்

முன்னுரை

தமிழக வரலாறு என்றவுடனே அறிஞர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் உடனே நெஞ்சத்தில் தோன்றுவது முச்சங்கங்களேயாம். பண்டைக்காலத் தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கை ஆகியவற்றைத் தெள்ளத் தெளிய நாம் அறிய வேண்டுமானால், முச்சங்க வரலாறு, அச்சங்கப் புலவர்கள் யாத்த சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை நாம் நன்கு அறிதல் வேண்டும். முச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் கணக்கிலடங்கா. அவற்றுள்ளே முதற் சங்க நூல்கள் எனப்படுபவை இன்று பெயரளவிலேதான் காட்சி அளிக்கின்றன, இடைச் சங்க நூல்களிலே இன்றும் எஞ்சி நின்று மக்கள் உள்ளத்தையும் அக்காலத் தமிழகத்தையும் காட்டி நம்மைக் களிப்படையச் செய்துகொண்டிருப்பது ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும். அடுத்து இடையிலே எழும்பிய நீருக்கும், ஏற்பட்ட போருக்கும், அயலார் மூட்டிய நெருப்புக்கும், நம்மவர் மறதிக்கும், கரையானுக்கும் இரையாகாதவாறு இன்றுவரை நின்று, நொந்த நந்தம் சிந்தையிலே செந்தேன் பொழிந்துகொண்டிருப்பவை கடைச்சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, குறள் என்பனவாம். இன்றும் கூட சங்க காலம் என்றாலும், சங்க இலக்கியங்கள் என்றாலும், கடைச்சங்க காலத்தையும் அக்கால நூல்களையுமே குறிக்கும். கடைச்சங்க இறுதிக்காலத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் செவ்வி அருமை