பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தமிழ் நாடும் மொழியும்


ளையும், தமிழ் வளர்ச்சியையும், அக்காலச் சமய நிலையையும் இன்ன பிறவற்றையும் நாம் நன்கு அறிவதற்குப் பேருதவி புரிகின்றன. இனி இவற்றை முறையே ஆராய்வோம்.

முச்சங்கம்

தமிழ் நாடு பற்றிய எந்த வரலாறாயினும் சரி, அதிலே முதல் அத்தியாயமாக இருப்பது முச்சங்கம் பற்றிய வரலாறாகும். சங்கங்கள் எப்பொழுது தோன்றின? அவற்றை ஏற்படுத்திய மன்னர்கள் யார்? அவை எத்தனை ஆண்டுகள் உலகில் நிலவின? அவற்றிலிருந்த புலவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இயற்றிய நூல்கள் யாவை? போன்ற வினாக்கள் இன்று முச்சங்கம் பற்றி எழுப்பப்படுகின்றன.

சங்கத் தாய் ஈன்ற செழுங்குழவிகளாகிய பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, குறள் ஆகிய இலக்கிய நூற்களிலே சங்கம் என்ற சொல்லே கிடையாது. சங்கம் பற்றிய குறிப்பும் கிடையாது. கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியலுரையிலே சங்கங்கள் பற்றிய குறிப்புகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன. முதலில் அந்நூல் தரும் குறிப்புகளை நோக்குவோம்.

தலைச் சங்கம்

இதனை முதலில் நிறுவிய பெருந்தகை காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் இருந்தவன் பாண்டியன் கடுங்கோன் என்னும் மன்னனாவான். இது நின்று புகழ் விளக்கிய இடம் தென் மதுரை. இச்சங்கம் நிலவிய ஆண்டுகளின் எண்ணிக்கை 4500. சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள் 4449 பேர். இச்சங்க காலத்திலிருந்த அரசர்கள் 89 பேர். இச்சங்கத்திலிருந்த புலவர்களுள் அடையாளங் காணப்பட்டோர் அகத்