பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழ் நாடும் மொழியும்


தமிழக வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய காலமாகும்.

இடைச் சங்கம் கடல்கோளால் அழிந்த பின்னர், இப்பொழுதுள்ள மதுரையிலே இச்சங்கம் தோன்றியதாம். இதன் தலைவர் நக்கீரர். இச்சங்கத்தே வீற்றிருந்த புலவர் பெருமக்கள் தொகை 49-ஆம். இச்சங்கத்தின் கீழ் எல்லை கி. பி. 200; மேல் எல்லை கி. மு. 300. நெஞ்சையள்ளும் சிலம்பும், மணிமேகலையும், குறளும் பிறவும் தோன்றியது இக்காலத்தை ஒட்டியே தான்.

இந்த மூன்று சங்கம் பற்றிய அறிஞர் கருத்துக்களிலே வேற்றுமைகள் பல உள. பொதுவாக அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். 'இந்த முச்சங்க வரலாறே பொய்; கட்டுக்கதை; மூன்று சங்கங்கள் இருந்தன என்று சொல்லு வது அரபு நாட்டு ஈசாப் கதையை ஒத்தது' என்பது ஒருசாரார் கருத்து. 'இறையனார் களவியலுரை கூறும் கருத்துக்கள் அத்தனையும் முழுக்க முழுக்க உண்மை; மறுக்க முடியாதவை' என்பது மற்றொரு சாரார் கருத்து. முதல் வகையினர்க்கும் இரண்டாம் வகையினர்க்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.

முச்சங்கம் பற்றிய வரலாறுகளையும், சங்க இலக்கியங்களில் வருகின்ற கடல்கோள் பற்றிய குறிப்புகளையும், எகேல் போன்ற மேலை நாட்டாரது, குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி உரைகளையும் பார்க்குங்கால், களவியல் உரைக் குறிப்புகளிலே ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணவேண்டியுள்ளது.

முச்சங்க வரலாற்றை முதல்வகையார் முழுதும் பொய் என்று முடிவுகட்டுவதற்குக் காரணம், அவற்றில் வருகின்ற