பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ் நாடும் மொழியும்


12000 கைதிகளைப் பிடித்துக்கொண்டு தன்னாடு திரும்பினான். திரும்பிய பின்னர் அக்கைதிகளைக் கொண்டு காவிரி நதியின் இரு கரைகளையும் செப்பனிட்டான். ஈழத்தின் பழங்கால நூல்களான மகாவமிசம், தீப வமிசம் இதனைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன. கரிகாலனது காவிரி அணை நூறு மைல் நீளம் இருந்ததென இவை கூறுகின்றன. கரிகாலனது இவ்வழியாப் பணியைப் பற்றித் திருவாலங்காட்டுப் பட்டயங்களும், ரேனாட்டுச் சாசனங்களும் நன்கு கூறுகின்றன.

கரிகாலனைப் பற்றி உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் நூல் பாடியுள்ளார் பொருநராற்றுப்படையும் இவனை நன்கு புகழ்ந்து பேசுகின்றது. இவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது. இத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் பல வணிகத்தின் பொருட்டு வந்துசென்றன. வெளிநாட்டு வணிகர் பலர் இவ்வூரில் வந்து குடியேறினர். வெளிநாடுகளிலிருந்து பல பொருள்கள் வந்து இந்நகரில் குவிந்தன. தமிழ்நாட்டுப் பொருள்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் இப்பெருநகர் சோழர் தம் தலை நகராகவும் விளங்கியது. இந்நகர் திண்ணிய மதிலினையும், புலி அடையாளம் பொறிக்கப்பட்ட வலிய கதவுகளையும், பல உணவுச் சாலைகளையும், பலவகை ஓவியங்கள் தீட்டப்பெற்ற வெண் சுவருடைய கோவில்களையும், அமணப்பள்ளிகளையும், குளங்களையும், முனிவர் தங்கும் இளமரக்காவினையும், காளி கோட்டத்தையும் கொண்டு விளங்கியது.

பட்டினப்பாக்கத்தில் பரதவர் வாழ்ந்தனர். இவர்கள் உயர் நிலை மாடங்களிலிருந்து செல்வ மகளிர் பாடும் பாடல்களைக் கேட்டு மகிழ்வர். மாடங்களில் எரியும் விளக்குகளின் உதவியால் அவர்கள் வைகறையில் கட்டுமரங்களிற் செல்வர்.