பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தமிழ் நாடும் மொழியும்


துள்ளது. முத்தை அணிந்தால் மட்டும் அவர்களுக்குப் போதாது. முத்தின் மீது உலவவேண்டும் என்பதும் அந்நாரீமணிகளின் மனப்பான்மையாகும்."

இதுமட்டுமா? தமிழக மன்னர்கள் ரோம் நாட்டு மன்னன் அகச்டசுசீசருக்கும், சீன மன்னனுக்கும் தூது அனுப்பியுள்ளனராம். தமிழ் வணிகர்களுக்குக் கடலே அஞ்சியதாம். வெளிநாட்டு வாணிகத்தைப் போன்றே உள் நாட்டு வாணிகமும் சிறந்து விளங்கியது. அவ்வியாபாரம் பெருநகர்களிலன்றிச் சிற்றூர்களிலும் பரவி இருந்தது. வணிகர் வியாபாரப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு வண்டிகளில் ஏற்றிச்சென்றனர். பகலில் திறந்திருக்கும் கடைவீதிகள் நாளங்காடி எனவும், இரவில் திறந்திருக்கும் கடைவீதிகள் அல்லங்காடி எனவும் வழங்கப்பட்டன. பண்டு வாணிகம் வளம் பெற்று விளங்கியமைக்கு முக்கிய காரணம் அன்று நாடு முழுதும் நல்ல சாலைகள் இருந்தமையே.

தமிழ்நாட்டுப் பண்டைய வாணிகச் செழிப்பைப் பற்றிப் பல ஆங்கில வரலாற்று நூல்கள் சிறந்த முறையிலே பேசுகின்றன.

அரசியல்

பண்டைத் தமிழகத்தில் நிலவிவந்த ஆட்சி முடியாட்சியே. எனினும் குடியாட்சியே அந்த முடியாட்சி மூலம் நடைபெற்றது. இதனைப் புறநானூறு நன்கு தெளிவாகக் காட்டுகின்றது. மன்னன், 'மக்களின் நலனே தன் நலன்; மக்கள் வாழ்வே தன் வாழ்வு' என்று எண்ணி முறைபிறழாது, அறந்திறம்பாது நெறியே நின்று ஆட்சிபுரிந்தான். காவலர்கள் புலவர் பெருமக்களுக்கு நல்ல மதிப்பை அளித்தனர்.