பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

45


புலவர் சொல்லைப் பொன்னேபோலப் போற்றி ஒழுகினர். புலவரும் மன்னன் நன்னெறி விலகிப் புன்னெறி தழுவி இடர்ப்படுகையிலே சென்று தூயது துலக்கித் தீயது விலக்கி அறிவுகொளுத்தினர். இதனைக் கோவூர்க்கிழார் வரலாறு ஒன்றே உறுதிப்படுத்தும். முன்னர்க் கூறியவாறு தமிழகம் பண்டைக்காலத்திலே முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டது. அவர்களோடு, பாரி, காரி போன்ற வேளிரும், குறுநில மன்னரும் இருந்து நாடு காவல் செய்தனர்.

மன்னர்கள் ஆறில் ஒருபங்கு இறைபெற்று முறை செய்தனர். மேலும் அவர்கள் மக்களின் காட்சிக்கெளியராய் வாழ்ந்துவந்தனர். இதனால் மக்களும் மன்னனை எளிதிற் பார்த்துத் தம் குறைகூறி முறைசெயப்பெற்றனர்.

பண்டைத் தமிழ் ஆட்சிமுறையைச் செவ்வனே அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது குறளே. அரசன் என்பவன் யார்? அவன் கடமை என்ன? அவன் குடிகட்குச் செய்ய வேண்டியன என்ன? என்பன போன்ற வினாக்கட்கு விடை காண வேண்டுமாயின் குறளே பெரிதும் உதவும். மன்னனுக்கு அரசியலில் உதவ ஐம்பெருங்குழுவும், எண் பேராயமும் இருந்தன. அவற்றின் துணைகொண்டே ஆட்சி நடைபெற்றது

கல்வி முறை

சங்ககாலக் கல்விமுறை மிகவும் சிறந்த முறையிலே அமைந்திருந்தது. சாதிமத பேதமின்றி ஆடவரும் பெண்டிரும் கல்வி கற்றிருந்தனர். இதனை வெண்ணிக்குயத்தியார் முதலிய பெண்டிர்தம் பாடல்கள் நன்கு தெளிவுறுத்தும். சங்ககாலத்திலே கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தது. கற்றுத் துறைபோய நற்றமிழ் வல்லார்க்குக் காவலனும் கவரி வீசினான்; கைகூப்பினான்.