பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

51


'தனக்கென வாழாப் பிறர்க்குரிய யாள' (அகம். 54)
‘பிறர்க்கென வாழ்தி நீ' (பதிற். 38)

என்ற சங்ககாலப் பாடல் வரிகள் மூலம் நன்கு அறியலாம். செய் நன்றி மறத்தல் பெரிய பாவமாகக் கருதப்பட்டது என்பதைப் பின்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.

'ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச் சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென' (புறம். 34)

சமய நிலை

திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்' பெரியோராய் விளங்கினர் என்றும், ஒருவன் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அடைவான் என மக்கள் எண்ணினர் என்றும், கணவன் இறப்பின் மனைவி உடன்கட்டை யேறுதலும், அன்றிக் கைம்மை நோன்பு நோற்றலும் உண்டு என்றும் சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன.

காப்பிய காலம்

தமிழக வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் காப்பிய காலமாகும். காப்பிய காலம் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய கால