பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தமிழ் நாடும் மொழியும்


அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற பிரிவு காப்பிய காலத்திலும் இருந்தது. இவர்கள் உயர்ந்தோராகக் கருதப்பட்டனர். கம்மியர், குயவர், தச்சர், கொல்லர், கஞ்சர், குறவர், ஆயர், எயினர், கூத்தர், சூதர் எனத் தொழில்புரிவோர் பல்வேறு வகையினராய் விளங்கினர். படைக்கலம் செலுத்துதல், சுதை வேலை, தச்சுவேலை, சங்கறுத்தல், மாலை தொடுத்தல், ஓவியம் எழுதுதல், துணி நெய்தல், செம்பு, வெள்ளி, இரும்பு, பொன் இவற்றால் பொருள்கள் செய்தல் முதலிய முக்கிய தொழில்களை மக்கள் செய்துவந்தனர்.

“மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பமல்லது தொழுதகவு இல்"

எனச் செங்குட்டுவன் கூற்றாக அடிகள் பாடியிருப்பதின் மூலம் அக்காலத்தில் மன்னர்கள் தங்கள் பொறுப்பை நன்கு உணர்ந்து பணியாற்றினர் எனத் தெரியவருகின்றது. மக்கள் நலமே தம் நலம் எனத் தங்கள் மனதிலே கொண்டு, அவர்கள் அரசியற் சுற்றம், எண்பேராயம், ஐம்பெருங்குழு, நால்வகைப் படை இவற்றின் துணையுடன் நாட்டின் நலம் காத்துவந்தனர். எனவே மக்கள் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ்ந்தனர்.

இருண்ட காலம்

தமிழ் நாட்டின் பொற்காலமாகிய சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளில், அதாவது கி. பி. 3, 4, 5-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றது என்று சொல்லமுடியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருந்தது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் என்னும் ஓர் அரச மரபினர் தமிழ்நாட்டின் வட