பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

59


பகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினர். இவர்களைப் போன்றே கி. பி. 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாட்டில் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் என்போர் தலையெடுத்தனர். முத்தமிழ் வளர்த்த முடியுடை மன்னர் மறைந்தனர். நாளுக்கு நாள் தமிழர் வீரம் குன்றியதால் வடவராகிய இராட்டிரகூட, கங்க வேந்தர்கள் தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். எனவே இக்காலத்தினைத் தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்று கூறவேண்டும். இக்காலத்தில் ஆண்டவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிவதற்கில்லை. எனினும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இக்காலத்தைக் களப்பிரர் இடையீட்டுக் காலம் என்று அழைப்பர். இக்களப்பிரர் வரலாறு குறித்து ஒன்றும் திட்டமாகக் கூறுவதற்கில்லை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் களப்பிரர் காளத்தி முதலிய தமிழ்நாட்டு வட எல்லை மலைத்தொடர்களில் வாழ்ந்த ஒரு கள்ளர் கூட்டத்தினர் என்று "பல்லவர் வரலாறு' என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தமிழ் நாட்டினுள் புகுந்து தமிழ் வேந்தர்களை வென்று தமிழகம் முழுவதும் தம் ஆட்சியை நிறுவினர். வேள்விக்குடிச் செப்பேடுகள் இவர்கள் பாண்டியரை வென்று பாண்டிய நாட்டைக்கைப்பற்றி ஆண்டனர் என்றும், அவர்தம் ஆட்சியில் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முன்செய்திருந்த அறச்செயல் அழிக்கப்பட்டது என்றும் கூறுவதால் களப்பிரர் படையெழுச்சி பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணியது என நாம் அறியலாம். இதன் காரணமாகவே மதுரையில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றிருக்கவேண்டும் என அறிஞர் கருதுகின்றனர். சுருங்கக் கூறின் களப்பிரர் படையெடுப்பால் தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் நாகரிகம் ஆகியவை அடியோடு வீழ்ச்சி அடைந்தன.