பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. பல்லவப் பேரரசு

தோற்றம்

முற்கால இந்திய வரலாற்றிலே விளங்காதன பல உள. அவற்றுள்ளே பல்லவர் தோற்றமும் ஒன்று. இது நெடு நாளைக்கு முன்பு டாக்டர் V. A. சிமித் கூறியதாகும். கோபாலன் என்பவர் இது குறித்து, 1928-ஆம் ஆண்டில் கூறியதாவது :- தற்பொழுது நமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பல்லவர் தோற்றத்தைப்பற்றி நாம் எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. முதன் முதலில் பல்லவர் என்போர் பார்த்தியன் மரபினைச் சேர்ந்தவர்கள் என்றும், மேற்கு இந்தியா வழியாக வந்து தக்கணத்தைக் கடந்து அவர்கள் தொண்டை மண்டலத்தை அடைந்தனர் என்றும் எல்லோரும் கருதினர். பல்லவர் தங்கள் முன்னோரின் தொடர்பினைக் கைவிட்டமைக்குக் காரணம் அவர்கள் முற்றிலும் இந்தியப் பண்பாட்டில் முழுகினமையே என்றும் எண்ணினர். இக்காலத்தில்கூட 'கேம்பிரிட்ச் இந்திய வரலாற்றுச் சுருக்கம்' என்ற நூலாசிரியர் பல்லவர் அயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என எண்ணுகிறார். இதற்குக் காட்டப்படும் காரணங்கள் பின் வருமாறு;- 'பார்த்தியன்' என்ற சொல் காலப்போக்கில் ‘பால்த்தியன்' எனத் திரிந்து பின் பல்லவன் என உருமாறிற்று. புராணங்களிலே சாகர்கள், யவனர்கள் ஆகிய அயலவரோடு பல்லவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கட்கிடையே உறவு முறையும் கற்பிக்கப்பட்டுள்ளது. கிர்னார் (Girnar) கல்வெட்டிலே, உருத்திரதாமன் என்பவன் பல்லவர் தளபதியாகிய சுவிசாகன் என்பவனைக் குறித்துள்ளான், பலசாரி என்ற