பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தமிழ் நாடும் மொழியும்


வாகும். மாமல்லபுரம் வராகப்பெருமாள் கோவிலில் உள்ள சிம்மவிட்டுணுவும் அவனது மனைவியரும் ஆகிய மூவரது உருவச் சிலைகளும், தருமராச இரதத்திலுள்ள நரசிம்மவர்மனது உருவச் சிலையும், அர்ச்சுனன் இரதம் என்னும் கோவிலில் காணும் பல பல்லவ அரசர்களது உருவச்சிலைகளும் இன்றும் அவர்தம் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இதே போன்று கைலாசநாதர் கோவிலிலும், சித்தன்னவாசல் குகைக்கோவிலிலும் காணப்படும் ஓவியங்கள் ஒப்பற்றனவாகும். சித்தன்ன வாசல் குகைக் கோவில் ஓவியம் தமிழ்நாட்டு மிகப் பழைய ஓவியமாகும். சித்தன்னவாசல் என்னும் ஊர் திருச்சி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை, இரு நடன மங்கையரின் ஓவியங்களும், தாமரை பூத்து விளங்கும் காதிகா பூமி என்னும் அகழியின் ஓவியமும், மகேந்திரன், இவன் அரசி இவர்களது ஓவியங்களுமாம். கைலாசநாதர் கோவில் சுவர் ஓவியங்களில் பெரும்பாலானவை பெரிதும் சிதைந்தும் அழிந்தும் உள்ளன. பல காலம் மறைந்திருந்த பல்லவர் காலத்து ஓவியங்களை உலகிற்கு வெளிப்படுத்திய பெருமை பிரெஞ்சு அறிஞர் மூவோதூப்ராய் அவர்களுக்கே உரியது.

பல்லவர் காலத்தில் இசைக்கலையும் பெரிதும் போற்றப்பட்டது. பல்லவ மன்னன் மகேந்திரன் சிறந்த இசைக் கலைஞன் ஆவான். இவன் புத்தம் புதிய இசை ஒன்றினைக் கண்டுபிடித்த காரணத்தால் சங்கீர்ணசாதி என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். மகேந்திரனது குடுமியா மலைச் சாசனம் தமிழ் நாட்டு இசையினைப்பற்றி நன்கு விளக்குகின்றது. இச்சாசனம் வடமொழியில் உள்ளது; பல சுரங்களின் தன்மையை நன்கு எடுத்தியம்புகின்றது. மகேந்திரனது மாமண்டூர் குகைக்கோவில் சாசனம் இம்மன்னன் 'தட்சண