பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

திவாகரர் சோழக் குடும்பத்தின் வழிவந்தவர் என்ற ஒரு கருத்து சிலரிடையே நிலவுவது உண்டு. அத்தகையவர் இந்தத் திவாகரர் அல்லர்; அவர் ஆதி திவாகரம் எழுதிய திவாகரராவார் என்ற கருத்து வேற்றுமையும் உண்டு. இவ்விரண்டனுள் பின் கருத்தே பொருத்தமானதாகத் தெரிகிறது. ஏனெனில், இந்தத் திவாகரர் சோழர் குடிவழியினராயிருந்திருந்தால் சேந்தனால் ஆதரிக்கப்பட்டிருக்கவேண்டியதில்லையன்றோ?

அடுத்துப் பேசப்போகும் பிங்கல நிகண்டின் ஆசிரியராகிய பிங்கலர் என்பவர் திவாகரரின் மகவார் என்பதாகப் பிங்கல நிகண்டின் பாயிரத்தில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதுகுறித்து ஆங்கு ஆராய்வாம்.

திவாகரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்பது முன்னரே சொல்லப்பட்டுள்ளது. இக் குறிப்புக்களைத் தவிர, திவாகரரைப் பற்றி வேறொன்றும் தெரிந்திலது. இனி ஏதேனும் கிடைத்தால் உண்டு.

நூலின் காலம்

சேந்தனும் திவாகரரும் எட்டாம் நூற்றாண்டினராதலின், சேந்தன் திவாகரம் எட்டாம் நூற்றாண்டு நூல் என்பது இனிது பெறப்படும்.