பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பல பொருள்களின் கூட்டத்தைக் குறிக்கும் என்பதுபோல, இத்தொகுதி அமைக்கப்பட்டிருப்பதால் இதற்குப் 'பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி' என்னும் பெயர் கொடுக்கப்பட்டது பொருத்தம் தானே!

எனவே, திவாகரத்தின் பன்னிரண்டு தொகுதிகளையும் (1) ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி, (2) ஒருசொல் பல்பொருள் பெயர்த் தொகுதி, (3) பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூவகைக்குள் அடக்கி விடலாம். இங்கே இம்மூவகை அமைப்புக்களைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதற்குத் தக்க காரணம் உண்டு. திவாகரத்தின் தொகுதி அமைப்புமுறையே பின்வந்த நிகண்டுகளின் அமைப்புக்கு வழிகாட்டி என்று முன்னரே கண்டோம். அவ்வண்ணமே-திவாகரத்தைப் போலவே பன்னிரண்டு தொகுதிகளாகச் சில நிகண்டுகள் அமைந்துள்ளன. இப்பன்னிரண்டு தொகுதிகளையும் மூவகைத் தொகுதிகளுள் நாம் அடக்கியிருக்கிறோம். இம்மூன்றனுள் முதல் வகையைப் பற்றி மட்டும் (அதாவது முதல் பத்துத் தொகுதிகளைப் பற்றி மட்டும்) சில நிகண்டுகள் பேசுகின்றன. வேறு சில நிகண்டுகளோ, இரண்டாம் வகையைப் பற்றி மட்டும் (அதாவது பதினொன்றாவது தொகுதியைப் பற்றி மட்டும்) பேசுகின்றன. இன்னும் சில நிகண்டுகளோ, மூன்றாம் வகையைப் பற்றி மட்டும் (அதாவது பன்னிரண்டாவது தொகுதியைப் பற்றி மட்டும்) பேசுகின்றன. அந்த விவரங்கள் எல்லாம், பின்னர் அந்தந்த நிகண்டுகளைப் பற்றித் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விளக்கும்போது குறிப்பிடப்