பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


அகராதி என்றால் என்ன ?

ஒரு மொழியில் உள்ள சொற்கள் அகர வரிசையில் அடுக்கிப் பொருள் (அர்த்தம்) கூறப்பட்டிருப்பதற்கு அகராதி என்று பெயராம். அதாவது, ஆனி, அறம், ஆடு, அணில் என்னும் சொற்களை எடுத்துக் கொண்டால், தமிழ் எழுத்துக்களுள் முதலெழுத்தாகிய ‘அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அறம், அணில் என்னும் சொற்களை முதலிலும், அடுத்த எழுத்தாகிய ‘ஆ’ என்னும் எழுத்தில் தொடங்கும் ஆனி, ஆடு, என்னும் சொற்களை அடுத்தபடியாகவும் நிறுத்த வேண்டும்; அறம், அணில் என்னும் சொற்களுள்ளும் இரண்டாவது எழுத்துக்களை நோக்கின், ‘ற’ என்பதனினும் ‘ணி’ என்பது எழுத்து வரிசையில் முதன்மையானதாதலின் அணில் என்னும் சொல்லை முதலிலும், அறம் என்னும் சொல்லை அடுத்தபடியாகவும் நிறுத்த வேண்டும்; அது போலவே, ஆனி, ஆடு என்னும் சொற்களுள்ளும் இரண்டாவது எழுத்துக்களுள் ‘னி’ என்பதனினும் ‘டு’ என்பது முதன்மையானதாதலின் ஆடு என்னும் சொல்லை முன்னும், ஆனி என்னும் சொல்லைப் பின்னும் அமைக்க வேண்டும்; இவ்வாறே இன்னும் மூன்றாவது–நான்காவது–ஐந்தாவது எழுத்துக்களையும் ஐந்திற்கும் மேற்பட்ட எழுத்துக்களையும் நோக்கிச் சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்கு நேரே பொருளும் கொடுக்கப்பட்டிருக்கும் சுவடிக்குத் தான் அகராதி என்பது பெயர்.

+அகரம் ஆதி = அகராதி, அகரம் என்றால் ‘அ’. (அகரம் என்பதில் உள்ள ‘கரம்’ என்பது, சாரியை எனப்படும்.) ஆதி என்றால் ‘முதல்’. அ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கிச் செல்வதால்