பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் பலவாறு வழங்கப்படும் வட்டார வழக்குச் சொற்கள் மட்டும் அகர வரிசையில் பொருள் கூறப்பட்டிருக்கும் வழக்கு அகராதிகள் (Dialects).

(4) ஒரு நூலின் இறுதியில் அல்லது முதலில், அந்நூலிலுள்ள செய்யுட்களின் முதலிலுள்ள சொற்களையெல்லாம் திரட்டி அகர வரிசையில் கொடுக்கும் செய்யுள் முதற் குறிப்பகராதி; நூலின் உள் தலைப்புக்களைக் கூறும் பொருளடக்க அகராதி.

(5) ஒரு நூலிலுள்ள அருஞ்சொற்களை மட்டும் பொருளுடன் அந்நூலினிறுதியில் தந்திருக்கும் அருஞ் சொல்லகராதி.

(6) ஒரு நூலிலுள்ள சொற்கள் அனைத்தையும் நூலில் வந்துள்ள இடஞ்சுட்டிக் கொடுக்கும் தனி நூல் அகராதி.

(7) ஒரு நூலிலுள்ள இன்றியமையாச் சொற்களை மட்டுமோ அல்லது பொருட்களை (செய்திகளை) மட்டுமோ நூலில் வந்துள்ள அடி-இடம் சுட்டிக் கொடுத்துள்ள சிறப்பு அகராதி (Concordance). இவ்விருவகையுள் சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பது ‘சொற் கோவை அகராதி’ (Verbal Concordance) எனவும், பொருட்கள் கொடுக்கப்பட்டிருப்பது ‘பொருட்கோவை அகராதி’ (Real Concordance) எனவும் அழைக்கப்படும்.

(8) பல்வகைக் கலைத் துறை - அறிவுத்துறை பற்றிய படங்களுடன் கூடிய அருஞ்சொல் விளக்க அகராதிகள் (Glossary).