பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகராதிக் கலை வரலாறு யாது?

ஒரு கலையாக வளர்ச்சி பெற்ற தமிழ் அகராதித்துறை மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோற்றம் எடுத்தது. இப்பொழுது கிடைத்திருக்கும் தமிழ் நூற்களுள் முற்பட்டதாகவும், மூவாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றியதாகவும் கருதப்படும் தொல்காப்பியம் என்னும் பெரிய இலக்கண நூலில் சொற்களுக்குப் பொருள் கூறும் பகுதிகள் உள்ளன.

முதல் தமிழ் அகராதி :

தொல்காப்பியம் ‘மொழி விஞ்ஞானமும்’, ‘சமூக வாழ்வியல் விஞ்ஞானமும்’ அடங்கிய ஒரு தலை நூலாகும். அதன் முதல் பிரிவாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்திலக்கணமும், இரண்டாவது பிரிவாகிய சொல்லதிகாரத்தில் சொல்லிலக்கணமும், இறுதிப் பிரிவாகிய பொருளதிகாரத்தில் செய்யுளிலக்கணமும் அணியிலக்கணமும் வாழ்வியற் பொருளிலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் சொல்லதிகாரத்திலுள்ள உரியியல் என்னும் பிரிவில் 120 சொற்கட்குப் பொருள் கூறியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார். அதே அதிகாரத்திலுள்ள இடையியல் என்னும் பகுதியிலும் ஒருசார் சொற்கட்கு உரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. பொருளதிகாரத்திலுள்ள மரபியல் எனும் பகுதியிலும் சொற்பொருள் அறிவிக்கும் கூறு அமைந்துள்ளது. இம்மூன்று இயல்களுக்குள்ளேயே உரியியலில்தான் முழு அளவில் அகராதிக் கூறு அமைந்துள்ளது. எனவே இதனை ‘முதல் தமிழ் அகராதி’