பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/230

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

226



மேல் உள்ள அகராதி முறையான அமைப்பு முறை சிவன்பிள்ளை யவர்களின் கைவண்ணமாகும். படிப்பவரின் வசதியைக் கருதி, பிங்கலரது வைப்பு முறையை மாற்றிய சிவன் பிள்ளையின் துணிவு வியத்தற்குரியது. இம்முறையினால், எந்தச் சொல்லுக்குப் பொருள் காணவேண்டுமாயினும் உடனே கண்டு பிடித்துவிடலாம்.

இந்த அகராதி வைப்புமுறை சிவன் பிள்ளையின் கைவண்ண மன்று; பிங்கலரே அகராதி முறையில் அமைத்தார் என்று யாரும் சொல்ல முடியாது—சொல்லக் கூடாது; ஏனெனில், பழைய ஓலைச் சுவடிகள் பலவற்றிலும் அகராதி முறையில் நூற்பாக்கள் காணப்பட வில்லை; அதனால் என்க.

நூற்பா ஒற்றுமை

திவாகரம் போலவே பிங்கலமும் நூற்பா நடையால் ஆனது என்ற ஒற்றுமை ஒருபுறம் இருக்க,—திவாகரத்தில் உள்ள சில நூற்பாக்கள் போலவே பிங்கலத்திலும் சில நூற்பாக்கள் உள்ளன. சான்றாகச் சில வருமாறு:—

(ஓர் அறிவுயிர்)

“உற்றறி புலனது ஒன்றே உடைமையின்
மற்றைப் புல்லும் மரனும் ஓரறிவே.”

(ஈரறி வுயிர்)

“உற்றறி புலனும், நாவும் உடைமையின்
அட்டையும் நந்துவும் போல்வ ஈரறிவே.”