பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சொல் என்று சிலரும், அதற்கு உரியது-இதற்கு உரியது. இன்னும் எதெதற்கோ உரியது என்று சிலரும் விளக்கம் தருகின்றனர். அப்படியெனில், பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் செய்யுட்கு உரிய சொல் இல்லையா - இன்னும் எதெதற்கோ உரியசொல் இல்லையா? எனவே, உரிச்சொல் என்றால், பல்வகைப் பண்புகளைக் குறிக்குஞ் சொல் என்ற முடிவுக்குத் துணிந்து வந்துவிட வேண்டும். ‘உரி’ என்னும் பெயர் ஏன் வந்தது-எப்படி வந்தது? என்று கேள்வி கேட்டால் சரிப்படாது. பெயருக்கும் வினைக்கும் பெயர், வினை என்னும் பெயர்கள் ஏன் வந்தன-எப்படி வந்தன? இவை போலவே உரி என்னும் பெயரும் வந்ததாகக் கொள்ள வேண்டும்.

இந்தப் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு சொற்களையும் பற்றித் தனித்தனியே பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்னும் நான்கு இயல்களில் பேசியுள்ளார் தொல்காப்பியனார். நான்கு சொற்கட்கும் நான்கு இயல்களில் இலக்கணங் கூற வந்த ஆசிரியர், பெயரியலிலும் வினையியலிலும் பெயர்-வினை வகைகளும் அவற்றின் இலக்கணங்களும் கூறினாரேயன்றி, பெயர்ச் சொற்கள் பலவற்றையும் வினைச் சொற்கள் பலவற்றையும் திரட்டி நிறுத்திப் பொருள் கூறினாரிலர்; ஆனால் இடையியலில் இடைச் சொற்கள் சிலவும், உரியியலில் உரிச் சொற்கள் பலவும் அமைத்து அவற்றிற்குப் பொருளும் கூறியுள்ளார். பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் மக்கள் தெளிவாக அறிவார்கள் எனக் கருதி அவற்றிற்குப் பொருள் கூறும் வேலையை ஆசிரியர் விட்டுவிட்டார் போலும். அதே நேரத்தில், இடைச் சொற்களும் உரிச் சொற்களும் பொருள் கடினமானவையாதலின்