பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22



என்னும் நூற்பாக்களானும் அறியலாம். மேலே “அன்ன பிறவும்” என்னும் நூற்பாவில் உள்ள ‘பன்முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல்,’ ‘இனத்தென அறியும் வரம்பு தமக்கின்மையின்’ ஆகிய தொடர்களை நோக்கின், சொல்லி முடியாவாதலின் எவ்வளவோ உரிச்சொற்கள் விடுபட்டன என்பது புலனாகும். மற்றும், அந்நூற்பாவின் இறுதியிலுள்ள ‘என்மனார் புலவர்’ என்னும் தொடரை நோக்கின் ஓர் அரிய உண்மை புலப்படும். ‘என்மனார் புலவர்’ என்றால், ‘என்று புலவர்கள் சொல்லியுள்ளனர்’. என்று பொருளாம். ‘என்று புலவர்கள் சொல்லியுள்ளனர்’. என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் என்றால்’ அவருக்கும் முன்னே எத்தனையோ புலவர்கள் எத்தனையோ இலக்கண நூற்கள் இயற்றியுள்ளனர் என்பது புலனாகிறது. அச்செல்வங்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் அவற்றில் கூறப்பட்ட சொற் பொருள்களையும் நாம் அறிய முடியும். எனவே, இவ்வுண்மையைக் கொண்டு நோக்குங்கால், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்திற்கும் முன்னமேயே - அதாவது வரலாற்றுக் காலத்திற்கும் அப்பாற்பட்ட மிகப் பழங்காலத்திலேயே சொல்லுக்குப் பொருள்கூறும் அகராதித்துறை தமிழ்மொழியில் தோன்றிவிட்டது என்னும் பேருண்மை தெரியவரும்.

சொல்லுக்குப் பொருள் கூறும் உரியியலில், ஒரே பொருள் (அர்த்தம்) உடைய சொற்களும் உள்ளன; பல பொருள்கள் தரும் சொற்களும் இடம்பெற்றுள்ளன; ஒரே பொருளைத் தரும் பல சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் எடுத்துக்காட்டுக்களுடன் தனித்தலைப்பில் பின்னர் விளக்கப்படும்.