பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


நிகண்டு—பெயர்க் காரணம் :

நிகண்டு நூற்கள் எல்லாம் சொல்லுக்குப் பொருள் கூறும் அகராதித் துறையைச் சேர்ந்தனவே யாகும் அங்ஙனமாயின், இத்துறை நூற்கட்கு ‘நிகண்டு’ என்னும் பொதுப்பெயர் ஏன் வந்தது?–என்பது குறித்து ஆராய வேண்டும்:–

வடமொழியிலுள்ள வேதத்தின் ஆறு அங்கங்களுள் நிருத்தம் என்பதும் ஒன்று ; அதில் ‘நிகண்டு’ என ஒரு பகுதி உள்ளது ; அப்பகுதியில் சொற்பொருள் விளக்கஞ் செய்யப்பட்டுள்ளது. இதை யொட்டி, சொல்லுக்குப் பொருள் கூறும் தனி நூற்களும் நிகண்டு என வடமொழியில் அழைக்கப்பட்டன. புராணம், பிரபந்தம் முதலிய பெயர்களைப் போல இந்த நிகண்டு என்னும் பெயரும் தமிழ் மொழிக்குத் தொத்திக் கொண்டது. சொற்பொருள் கூறத் தொடங்கிய தமிழ் நூற்களெல்லாம் நிகண்டு என்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பட்டன. இஃது ஒரு சாரார் கொள்கை.

நிகண்டு என்னும் வட சொல்லுக்குத் தொகுதிகூட்டம் என்று பொருளாம். சொற்கள் தொகுதியாக-கூட்டமாக அமைக்கப்பட்டுப் பொருள் விளக்கப்பட்டிருத்தலால் நிகண்டு என்னும் பெயர் தரப்பட்டதாம்.

நிகண்டு என்பது வடமொழிச் சொல் என்று சொல்பவர் ஒருபுறமிருக்க, அது தமிழ்ச் சொல்தான் என்று சொல்பவரும் உளர். நிகண்டு என்னும் சொல்லுக்கு உண்மை என்பது பொருள் எனவும், ‘நிகழ்ந்தது’ என்னும் சொல்தான் ‘நிகண்டு’ என மருவி விட்டதெனவும்