பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பல பொருள்களும், ஒரு பொருளுக்கு ‘உரிய’ பல பெயர்களும் கொடுக்கப்படுவதால் ‘உரிச் சொல்’ எனப்பட்டது என என்னென்னவோ காரணம் கூறி இடர்ப்படுகின்றனர்.

இனி, திவாகரம், பிங்கலம் முதலிய நூற்கட்கு, முதற் காலத்தில் உரிச்சொல் என்னும் பொதுப் பெயரே இருந்தது என்பதை உறுதி செய்யும் அகச் சான்றுகள் சில வருமாறு:—

(1) திவாகரம், பிங்கலம் ஆகிய நூற்கள் தோன்றிச் சில நூற்றாண்டுகள் கடந்த பின்னர், பதின் மூன்றாம் நூற்றாண்டில் ‘நன்னூல்’ என்னும் இலக்கண நூல் இயற்றிய பவணந்தி முனிவர், தொல்காப்பியச் சொல்லதிகார உரியியலைப் போலவே, தமது நன்னூலின் சொல்லதிகாரத்திலும் உரியியல் என ஒரு பகுதி அமைத்துச் சொற்பொருள் விளக்கஞ் செய்துளளார். அவர் உரியியலின் இறுதியில், ‘எல்லாச் சொற்கட்கும் இங்கே பொருள் கூறி முடியாது; மற்ற மற்ற சொற்கட்கு உரிய பொருள்களை யெல்லாம் பிங்கலம் முதலிய உரிச் சொல் நூற்களுள் கண்டு கொள்க’ என்னும் கருத்தில் ஒரு நூற்பா பாடியுள்ளார்; அது வருமாறு:—

“இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்றிசை நூலுட் குணிகுணப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே”

இந்நூற்பாவில், பிங்கலம் முதலிய நூற்கள் ‘உரிச்சொல்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க. திவாகரமும் பிங்கலமும் இயற்றப்பட்ட காலம்