பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

எட்டாம் நூற்றாண்டு; பவணந்தியார் நன்னூல் இயற்றியகாலமோ பதின்மூன்றாம் நூற்றாண்டு. ஐந்து நூற்றாண்டுகட்குப் பின்னும், நன்னூலார், பிங்கல முதலிய நூற்களை நிகண்டு என்னும் சொல்லால் குறிப்பிடாமல் ‘உரிச்சொல்’ என்னும் சொல்லால் குறிப்பிட்டிருப்பது காண்க.

(2) இதே நன்னூற் பாடலுக்குப் பிற்காலத்தில் உரை யெழுதிய மயிலை நாதர் என்னும் அறிஞர்,

“.........அவை பிங்கல முதலான புலவர்களாற் செய்யப் பட்ட உரிச்சொல் பனுவல்களுள் விரும்பி அறிந்து கொள்க”

எனத் தமது உரையிலும் நிகண்டு என்னாது உரிச்சொல் பனுவ லென்றே கூறியுள்ளமை காண்க. மற்றும், நன்னூல் பொது வியலில் உள்ள,

“எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”

என்னும் நூற்பாவின் உரையிலும் உரையாசிரியர் மயிலை நாதர்,

“......... விரிந்த உரிச்சொற் பனுவல்களுள்ளும் உரைத்தவாறு அறிந்து வழங்குக”

என்று உரிச்சொல் பனுவ லெனவே எழுதியுள்ளார். பனுவல்–நூல்; உரிச்சொல் பனுவல்–உரிச்சொல் நூல்,

இனி, பிங்கலம் முதலிய சில நூற்களின் பாயிரப் பகுதியிலும் உரிச்சொல் என்றே கூறியிருக்கும் சான்றுகள் வருமாறு: