பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

396

(சிறிய) தமிழ் - பிரெஞ்சு அகராதி மிகவும் சுருக்கமான சிறிய தமிழ் - பிரெஞ்சு அகராதி யொன்றும் புதுவை மாதாகோயில் அச்சகத் தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு - தமிழ் அகராதி பிரெஞ்சு சொல்லுக்குத் தமிழ்ச்சொல்லால் பொருள் கூறும் அகராதியிது. தமிழ் - பிரெஞ்சு அகராதி தொகுத்த முய்சே, துய்புய் என்னும் அறிஞரிருவரும் தாம் இதனையும் தொகுத்து உருவாக்கினார்கள். இதுவும் மிகப் பெரிய அகராதிதான். இதன் மூன்றாம் பதிப்பு, புதுச்சேரி மாதாகோயில் அச்சகத்தாரால் 1952 - இல் வெளியிடப்பட்டது.

போப் தமிழ் - ஆங்கில அகராதி இது ஜி.யு. போப் (Rev. G. U. Pope) அவர்களால் தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் எழுதப்பட்ட அகராதி . காலம் 1859 ஆகும். ஜி. யு. போப் என்னும் ஆங்கிலேயர் ஒரு தலை சிறந்த தமிழ்ப் பித்தர்; தாம் இறந்த பிறகு தமது கல்லறையின் மேல் தம்மை ஒரு தமிழ் மாணவன்' என்று குறிப்பிடும்படி உயிரோடிருந்த போதே கோரியிருந்தார். அவ்வாறே ஆங்கில நாட்டுக் கல்லறையில் பொறிக்கப்பட் டுள்ளது. தமிழ் நாட்டில் கிறித்துவம் பரப்ப வந்தப் போப் அவர்கள், உலகில் தமிழ் பரவும்படிச் செய்துள்ள தொண்டுகள் மிகப் பல. இவர் திருக்குறள், திரு வாசகம், நாலடியார் ஆகிய நூற்களை ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார். இந்த ஆங்கிலத் தமிழ்ப் பெரு மகனார் தமிழ் - ஆங்கில அகராதி படைத்ததில் வியப் பென்ன!