பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/43

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39



துள்ள ஆராய்ச்சி முடிபின்படி, உலகத்தின் முதல் அகராதியும் இதுவேதான். தொல்காப்பியமே போல, இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன் அசிரிய மக்கள் சொற்பொருள் கூறும் துறை நூல் இயற்றினரெனினும், மேலைநாட்டில் முதன் முதலாக அகரவரிசையில் அகராதி நூல் தோன்றியது பதினேழாம் நூற்றாண்டில்தான். அதாவது, 1612-ஆம் ஆண்டில் இத்தாலி மொழியில் முதல் முதலாக அகரவரிசையில் அகராதி தோன்றியது. இந்த இத்தாலி அகராதிக்குப் பதினெட்டாண்டுகட்கு முன்பே-1594-ஆம் ஆண்டிலேயே தமிழில் அகராதி நிகண்டு தோன்றிவிட்டதன்றோ? எனவேதான் அகராதி நிகண்டு உலக முதல் அகராதி என இங்கே சிறப்பித்து எழுதப்பட்டது.

1594-இல் அகராதி என்னும் பெயரை அறிமுகப்படுத்திய இரேவணசித்தர், அதற்குப் பதிலாக ‘அகர முதல்’ என்னும் அழகிய தூய தமிழ்ப் பெயரைத் தம் நூலிற்கு வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய திருக்குறளிலுள்ள

“அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”

என்னும் முதல் பாடலிலும், மூவாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய தொல்காப்பியத்திலுள்ள

“எழுத் தெனப் படுப,
அகர முதல் னகர இறுவாய்
முப்ப தென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே.”

என்னும் முதல் பாடலிலும் ‘அகர முதல்’ என்னும் அழகிய தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தன்றோ?