பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/48

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44



பல இயற்றினர். இவையெல்லாம் பின்னர்த் தனித்தனித் தலைப்பில் விரிவாக விளக்கப்படும்.

மேலே நாட்டார் இயற்றிய அகராதிகளுக்குள், பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்படும் ‘பெஸ்கி’ இயற்றிய சதுர் அகராதியும், ஃபாபிரிசியஸ் (Fabricius) என்பவரியற்றிய தமிழ்—ஆங்கில அகராதியும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராட்லர் (Rottler) என்பாரியற்றிய தமிழ்—ஆங்கில அகராதியும், ‘வின்சுலோ’ (Winslwo) என்பாரியற்றிய ஆங்கிலம்—தமிழ் அகராதியும் தமிழ்—ஆங்கில அகராதியும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. பிற்காலத்தில் தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் கூறும் அகராதிகள் பலவும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதிகள் பலவும் தோன்றுதற்கு முன்னோடியாக — முதல் நூற்களாக இருந்தவை, ஃபாபிரிசியஸ், ராட்லர், வின்சுலோ ஆகியோரியற்றிய அகராதிகளேயாம். இவற்றிற்கெல்லாம் மேலாக, தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் தனித் தமிழ் அகராதிகள் பல தோன்றுதற்கு முன்னோடி முதல் நூலாகத் திகழ்ந்தது வீரமாமுனிவரின் சதுர் அகராதியேயாம். இது, பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பிரிவுகளை உடையதாதலின் ‘சதுர் அகராதி’ எனப்பட்டது. பிற்காலத்தில் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலரால் தொகுக்கப்பட்ட மிகப் பெரிய தமிழகராதிகள் பலவும் இந்தச் சதுர் அகராதியைப் பின்பற்றியெழுந்தனவே.