பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/49

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

45



மேலை நாட்டினரின் ஈடுபாட்டினால் தமிழ் அகராதித் துறைக்குச் சில நன்மைகள் கிடைத்தன. அவையாவன :—

(1) நிகண்டு என்னும் பெயரில் செய்யுள் நடையில் இருந்த அகராதித் துறை, எல்லோரும் எளிதில் படித்துணருமாறு தனித்தனிச் சொல் நடையில் வந்தது.

(2) சொற்களின் முதல் எழுத்து—இரண்டாவது எழுத்து வரைக்கு மட்டுமே இதற்குமுன் அகர வரிசை கவனிக்கப்பட்டது. வெள்ளையர் வந்தபின் இறுதி எழுத்து வரைக்கும் அகர வரிசை பின்பற்றப்பட்டது.

(3) பழைய நிகண்டுகளில் அருஞ்சொற்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால், வெள்ளையர்கள் புதிதாகத் தமிழ் கற்றுக் கொண்டதனால் அவர்கட்கு அருஞ்சொற்கள் இவை—எளிய சொற்கள் இவை என்ற பாகுபாடே தெரியாமற்போயிற்று எனவே, அவர்கள் அருஞ்சொற்கள்—எளிய சொற்கள் ஆகிய எல்லாச் சொற்களையும் தொகுத்துத் தமிழ்ச் சொல் வளத்தை முழு உருவத்தில் காட்டினர்.

(4) கிறித்துவம் பரப்புவதற்காக அவர்கள் கல்லாத எளிய மக்களோடும் பழகியதால், அம்மக்கள் வாயிலாக அறிந்து கொண்ட எளிய பேச்சு வழக்குச் சொற்களையும் சேர்த்து அகராதிகளின் வடிவத்தை முழுமைப்படுத்தினர்.

(5) வினைச் சொற்களின் வேர்ச் சொற்களைத் தனி அடையாளமிட்டுக் காட்டி, அவ்வேர்ச் சொற்களிலிருந்து மற்ற வினையுருவங்கள் தோன்றுமாற்றை எடுத்துக்காட்டியுள்ளனர்.