பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/50

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46



(6) தமிழ்ச் சொற்களுக்கு நேரான இலத்தீன்—போர்ச்சுகீசியம்—பிரெஞ்சு—ஆங்கிலம்—ஆகிய மொழிச் சொற்களை அறிந்துகொள்ள வாய்ப்பு ஈந்தனர்.

இப்படியாக, சொற் பொருள் கூறும் கலைத்துறை, செய்யுள் நடையாலான நிகண்டுகளிலிருந்து தனிச்சொல் நடையாலான அகராதிகளாக மாறிப் பல்வகை வளர்ச்சிப் பருவங்களைப் படிப்படியாக எய்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டோடு, போர்ச்சுகீசியம், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய ஐரோப்பிய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் புதிதாகத் தோன்றுவது நின்றுவிட்டது. இருபதாம் நூற்றாண்டில், ஆங்கிலத்தோடு தமிழ் பிணைந்த அகராதிகள் பலவும், வட மொழி, இந்தி முதலிய இந்திய மொழிகளோடு தமிழ் பிணைந்த அகராதிகள் சிலவும் மட்டுமே புதிதாகத் தோன்றின. இவற்றோடு, தமிழுக்குத் தமிழ் அகராதிகள் மிகப் பல தோன்றின என்பது சொல்லாமலே விளங்கும்.

தமிழுக்குத் தமிழிலும், சொற்பொருள் கூறும் அகராதிகளேயன்றி, தொடக்கத்தில் கூறியுள்ளாங்கு, தனி நூல் அகராதி, தனித்துறையகராதி, கலைச்சொல் அகராதி, கலைக் களஞ்சியம், ஒப்பியல் மொழியகராதி, பழமொழியகராதி, புலவர் அகராதி, தொகையகராதி, தொடையகராதி முதலிய பல்வகை அகராதிகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றித் தமிழ் மொழி வளங்கொழிக்கச் செய்தன. இன்னும் பல்துறையகராதிகள் உருவாகிக்கொண்டுள்ளன.

மூவாயிரம் ஆண்டுக்கு முந்திய தொல்காப்பியக் காலமுதல் இன்றுவரையுள்ள தமிழ் அகராதிக் கலை வரலாற்றின் சுருக்கம் இதுதான்! விரிவு இந்நூல் முழுதுமாகும்!