பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

55



“கடி என் கிளவி வரைவே, கூர்மை, காப்பே, புதுமை, விரைவே, விளக்கம், மிகுதி, சிறப்பே, அச்சம், முன்தேற்று, ஆயீ ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. ஐயமும், கரிப்பும், ஆகலும் உரித்தே.”

இந் நூற்பாவில் கடி என்னும் சொற்கு உரிய பன்னிரு பொருள்களைக் காணலாம்.

இப்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள சொற்களுள் சில சொற்கட்கு எல்லாரும் அறிந்த பொருள் கூறப்படவில்லையே என்று சிலர் கேட்கலாம்; எடுத்துக்காட்டாக,—கடி என்னும் சொல்லுக்குக் ‘கடித்தல்’ என ஒரு பொருளும் உண்டே—அது தொல்காப்பிய நூற்பாவில் கூறப்படவில்லையே என்றும், மாலை என்னும் சொல்லுக்கு மாலை நேரம் எனவும் ஒரு பொருள் உண்டே—அது கூறப்படவில்லையே—‘மாலை இயல்பே’ என இயல்பு (தன்மை) என்னும் பொருள் மட்டுந்தானே கூறப்பட்டிருக்கிறது என்றும் கேட்கலாமல்லவா? இதற்குத் தக்க விடை வருமாறு:–

கடித்தல் எனப் பொருள்படும் இடத்தில் கடி என்னும் சொல் வினைச்சொல்லாகும்; வரைவு, கூர்மை முதலிய பொருள்படும்போது கடி என்னும் சொல் உரிச்சொல்லாகும். மாலை நேரம் எனப் பொருள்படும் இடத்தில் மாலை என்னும் சொல் காலப் பெயர்ச்சொல்லாகும்; இயல்பு என்று பொருள்படும் போது மாலை என்பது உரிச்சொல்லாகும். இந்தப் பகுதியோ உரியியல். எனவே, சொற்கள் உரிச்சொற்களாக, இருக்கும் நிலைக்கு மட்டுமே உரியியலில் பொருள் கூறப்படும்.