பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/61

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

57

றுடன், மேலுள்ள தொல்காப்பிய நூற்பாக்களையும் கருத்திற் கொள்வது கல்வியுலகத்திற்குக் கடமையாகும்.

மரபியல்

மரபியல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இறுதியில் உள்ளது. இன்னும் கேட்டால், தொல் காப்பிய முழுநூலின் இறுதிப் பகுதியே மரபியல்தான். மரபியலிலும் சொற்பொருள் கூறும் துறைக்கூறு அமைந்துள்ளது. மரபு என்னும் சொல்லுக்கு ஈண்டு முறைமை அல்லது வழக்கமுறை என்று பொருள் கொள்ளலாம்; அதாவது, இதையிதை இப்படியிப்படித்தான் சொல்வது முறை - இதையிதை இப்படியிப்படித்தான் செய்வது வழக்கம் - என்று வகுத்துக்கொண்டு உலக வழக்கில் பின்பற்றி வருகிறோமல்லவா? - அதற்குத்தான் மரபு என்று பெயராம். எடுத்துக்காட்டாக, மிகச் சிறிய கோழியைக் கோழிக் குஞ்சு என்று சொல்வதுதான் மரபே தவிர, கோழிக் குட்டி என்று சொல்வது மரபன்று; மிகச் சிறிய யானையை யானைக் குட்டி என்று சொல்வது மரபே தவிர, யானைக்குஞ்சு என்று சொல்வது மரபன்று.

தொல்காப்பியர் மரபியலில் இதையிதை இப்படியிப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற முறையில் பலவகைப் பொருள்கட்குரிய மரபுச் சொற்களைக் கூறியுள்ளார். ஆனால், ஆசிரியர் காலத்தில் வழங்கிய சில மரபு முறைகள் பிற்காலத்தில் மாறிப்போக, வேறு விதமாகவும் வழங்கப்படுகின்றன. ஆம்! கால வெள்ளத்தில் மிதந்து கலித்துச் செல்லும் உயிருள்ள மொழியின் போக்கை முற்றிலும் யாரே தடுக்க முடியும்?