பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36哆 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

நாடகப் புலமை

    சுவாமிகளின்நாடகப் புலமையை அக்காலத்தில் வியந்து பாராட்டாதாரில்லை. அவருடைய பாடல்களிலே உயர்ந்த கருத்துக்கள் நிறைந்திருக்கும்; அதே சமயத்தில் கல்லாதாருக்கும் பொருள் விளங்கக்கூடிய முறையில் எளிமையாகவுமிருக்கும்.
    பாடல்கள் எழுதும்போது சுவாமிகள் சொற்களைத் தேடிக் கொண்டிருப்பதில்லை. எதுகை, மோனை, நயம், பொருள் இவற்றுடன் சொற்கள் அவரைத் தேடி வந்து நிற்கும். ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் அரும்பெரும் ஆற்றல் சுவாமிகளுக்கிருந்தது.
    ஒரு முறை எழுதியதை அடித்துவிட்டுத் திருத்தி எழுதும் வழக்கம் சுவாமிகளிடம் இருந்ததில்லை. அடித்தல் திருத்தல் இல்லாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே போவார். சிந்தனை செய்ய நேரும் சந்தர்ப்பங்களில் எழுதுவதை நிறுத்தாமல் சிவமயம், வேலும் மயிலுந் துணை என்று பலமுறை எழுதிக்கொண்டே இருப்பார். இரண்டொரு பக்கங்கள் இவ்வாறு எழுதியபின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாடலைப் பூர்த்தி செய்வார். சுவாமிகள் எழுதிய நாடகக் கையெழுத்துப் பிரதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன.