பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம்

வீர அபிமன்யு

    சுவாமிகளின் புலமைக்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றில் அதிசயிக்கத்தக்க ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் கூறுகிறேன்:
    நான் நடிக்கத் தொடங்கிய காலத்தில் அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்தது. ஒருநாள் நாடக சபையின் உரிமையாளர்களில் ஒருவரான திரு. பழனியா பிள்ளை அவர்கள் சுவாமிகளிடம், "சுவாமி! சண்முகம் கதாநாயகனாக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுதுங்கள்" என்று கூறினார். அப்போது எனக்கு வயது ஏழு; என்றாலும் நன்றாக நினைவிருக்கிறது.
   அன்று மாலை சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்று அபிமன்யுசுந்தரி அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு 'அரிக்கன்' விளக்கை அருகில் வைத்துக் கொண்டு எழுதத்தொடங்கினார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரது படுக்கையருகே அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப்பட்டிருந்தது.
    இது வெறும் கட்டுக் கதையன்று; உயர்வு நவிற்சியுமன்று. கண்கண்டஉண்மை. இச்சம்பவத்தை