பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் *43

அந்த நாளில் சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்தபோது மாபெரும் புலவர்கள் நிறைந்த யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தில் சுவாமிகளின் புலமையை ஆராயப் பல கேள்விகள் கேட்கப் பட்டன. அக் கேள்விகளுக்கெல்லாம் மிக எளிதாகச் சுவாமிகள் விடையளிக்கவே, அவரது முத்தமிழ்ப் புலமையைப் பாராட்டிச் சங்கத்தார் வலம்புரிச்சங்கு ஒன்றைப் பரிசாகத் தந்து சுவாமிகளைப் போற்றினர். இத்தகைய ஒரு பெரும் புலவர்மீது சிலப்பதிகாரத்தை அறியாதவர் என்ற குற்றச்சாட்டை வீசுதல் முறை யன்று. கோவலன் நாடகம் தோன்றிய வரலாறு இது:

'நளவெண்பா' பாடிய புகழேந்திப் புலவர் பெயரால் அம்மானைப் பாடலாக நங்கைக் கதைகள் பல நமது நாட்டில் உலவி வந்தன. இக்கதைகள் நமது தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்தன. அல்லி அரசாணிமாலை, அபிமன்யு சுந்தரிமாலை, புலந்திரன் தூது, பவளக்கொடி மாலை, காத்தவராயன் கதை முதலிய பல கதைகள் இந்த வரிசையில் இடம் பெற்றவை. புலமைக்கடல் புகழேந்திப் புலவருக்கும் இந்தக் கதைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க முடியாது. ஆனால், இந்தப் புத்தகங்களில் எல்லாம் "புகழேந்திப் புலவர் அம்மானைப் பாடல்கள்" என்றே குறிப்பிட்டிருக்கும். தன்னை மறைத்துக் கொள்ள விரும்பிய யாரோ ஒரு புண்ணியவான் புகழேந்திப் புலவர்மீது இப் பழியைச் சுமத்தினார் என்றே கொள்ள வேண்டும்.