பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம்

55

நடிக்கும் எல்லாச்சபையினரும் திரு. சிவசண்முகம் பிள்ளை அவர்களின்பாடல்களையே பாடி வருகிறார்கள் என்பது இப்பெரியாருக்குப் பெருமை தருவதாகும்.

சுவாமிகள் ஒருமுறை இவரைச் சென்னையிலே சந்தித்தபோது இவருடைய கண்டி ராஜா நாடகத் திலுள்ள சந்தப்பாடல்களைப் புகழ்ந்து வெகுவாகப் பாராட்டினார். பிள்ளை அவர்கள் அப்பொழுது கையில் பொருளில்லாது மிகவும் வறுமைவாய்ப் பட்டிருந்தார். இதை அருகிலிருந்த அன்பர்களின் வாயிலாக அறிந்த சுவாமிகள், அந்த இடத்தில் அவரிடம் நேரில் பணம் கொடுத்தால் காசு வாங்கக் கூசுவாரென்றெண்ணி நூறு ரூபாய் நோட்டுக்களை ஓர் உறையில் வைத்துப் பிள்ளையவர்களின் பையில் போட்டு விட்டார். சுவாமிகளிடம் பேசிவிட்டு வண்டியேறிப் புறப்பட்ட திரு. சிவசண்முகம் பிள்ளை அவர்கள் சற்று தூரம் சென்றதும் எதற்கோ பையை எடுத்தவர் 'சங்கரதாசனின் அன்புக் காணிக்கை' என்றெழுதப்பட்ட உறையையும், அதனுள் வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுக்களையும் பார்த்துத் திரும்பி வந்து, புலவனைப் புலவனே அறிவான்; ஆனால், புலவனைப் புலவன் போற்றுவதில்லை. தாங்கள் அதற்கு விதிவிலக்குஎன்று கண் கலங்கக் கூறிச் சுவாமிகளைத் தழுவிக் கொண்டார்.