இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
செழியன் M, P. அதற்காவன செய்வதாகக் கூறியுள்ளார் — என்றாலும், அதற்கான ‘உத்தரவு’ கிடைத்திட எத்தனை காலமாகுமோ, யார் கண்டார்கள்! துரைத்தனத்தாருக்குத் தான் என்மீது அளவுகடந்த அன்பாயிற்றே!! அறிவாயே!! அதனால், நான் சிறையில் இருந்தபோது, என் இளையமகன் இளங்கோவன், ‘காஞ்சி’ எனும் பெயரில் கிழமை இதழ் ‘இலக்கிய இதழ்’ நடத்த — பெற்றிருந்த அனுமதியைப் பயன்படுத்தி, என் பணியினைத் தொடர்ந்திட முனைகின்றேன். ‘திராவிட நாடு’ இதழ் நடத்தத் துரைத்தன அனுமதி கிடைத்ததும், அந்தப் பெயருடன் இதழ் வெளிவரும் — காஞ்சி இலக்கிய இதழாகிவிடும். இந்த நல்ல நம்பிக்கையுடன் நான் முன்பு ‘திராவிட நாடு’, இதழில் தந்து வந்தவைகளை இனி, ‘காஞ்சி’ இதழ் மூலம் தர உன் இசைவு கிடைத்திடும் என்று எதிர்பார்த்து, பணியினைத் துவக்குகிறேன்.
- தம்பி! எப்போதோ படித்த ஒரு வரலாற்றுத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. தென் அமெரிக்க பூபாகத்தில் மெக்சிகோ நாட்டில் விடுதலைப்போர் நடாத்திய ‘ஜோரேஸ்’ எனும் மாவீரன், தலைநகர் இழந்து, அரசாங்க அலுவலகம் இழந்து, குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டியிலேறி, காட்டுப்பகுதிக்குச் செல்கிறான்; உடன் இருந்த தோழர்கள் கேட்கிறார்கள், “சர்க்கார் மாளிகை பறிபோய்விட்டதே, இனி சர்க்காரை எங்கிருந்து நாம் நடத்துவது?” என்று; ஜோரேஸ், பதிலுரைத்தான், “நாம் இருக்கும் இடம்தான் சர்க்கார் மாளிகை! முன்பு கற்களால் கட்டப்பட்ட மாளிகையிலிருந்து கொண்டு சர்க்காரை நடத்திவந்தோம்; அது மீண்டும் நம் கைவசமாகும் வரை இந்த ‘வண்டி’ தான் சர்க்கார் மாளிகை!” என்று.
- கோபித்துக்கொள்ளப் போகிறார்கள் தம்பி! பார்! பார்! இந்த அண்ணாத்துரை எத்தனை ஆணவத்துடன் தன்னை ஜோரேசுடன் ஒப்பிட்டுக் கொள்கிறான் என்று. நான் கூறியதிலே எனக்கும் ஜோரேசுக்கும் அல்ல; அந்த மாவீரன் சர்க்கார் மாளிகையாக, வண்டியைப் பயன்படுத்திக்கொண்டது வரையிலே மட்டுமே உவமை என்று கூறி, அவர்களின் கோபத்தைக் குறைத்துக் கொள்ளச் சொல்லிவிடு — தம்பி! ஜோரேஸ், வண்டியைச் சர்க்கார் மாளிகையாக்கிக்-