இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
- கொண்டதுபோல, நான், நிலைமை காரணமாக, காஞ்சி இதழை ‘திராவிட நாடு’ இதழாகப் பயன் படுத்திக்கொள்கிறேன்.
- இரவு ஒரு மணிக்கு விழுப்புரம் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன் — அதற்குப் பிறகும் தூக்கம் பிடிக்கவில்லை—மூன்று நாட்களாக, திருச்சி—பெரம்பலூர்—விழுப்புரம் ஆகிய இடங்களில், இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு, சிறை சென்று திரும்பிய தோழர்களை வாழ்த்தி வரவேற்கும் விழாக்களில் கலந்துகொண்டதால் கிடைத்த உற்சாகம் என்னைத் தூங்கவிடவில்லை. எத்துணை ஆர்வத்துடன் இருக்கின்றனர் சிறைசென்று வந்துள்ள நம் தோழர்கள், மக்களின் அன்பு எத்தகைய மன நெகிழ்ச்சியைத் தருகிறது! சிற்றூர்களிலே எல்லாம் கூடக்காண்கிறேன் ஒரு புது எழுச்சி, மகிழ்ச்சி. பலமிகக்கொண்ட ஒரு ஆட்சி, பிடிவாத உணர்ச்சியுடன் இந்தி ஆதிக்கத்தைப் புகுத்தும்போது, இன்னமும் போதுமான அளவு இதழ்களின் நல்லாதரவைப் பெற முடியாத நிலையிலே உள்ள நமது கழகம், துணிந்து நின்று அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பது கண்டு, மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள்.
இவர்களின் எதிர்ப்பும் இல்லை என்றால்...! என்று எண்ணிப் பெருமூச்செறிபவர்களும்,
இவர்களின் எதிர்ப்பினால் அல்லவா, இந்தி ஆதிக்கக்காரர்கள், கருப்பஞ்சாற்றிலே குழைத்துத் தருகிறார்கள் கடுவிஷத்தை என்று கூறுபவர்களும்,
இவர்களின் எதிர்ப்புக் கண்டும், சர்க்கார் தன் போக்கை மாற்றிக்கொள்ள மறுக்கிறதே என்று கூறி ஆயாசப்படுபவர்களும்,
பாவம், இளைஞர்கள்! இன்பவாழ்வில் ஈடுபடவேண்டிய வயதினர்! சிறைக்கொடுமைக்குத் தம்மைத்தாமே ஆளாக்கிக்கொண்டார்கள்; அவர்கள் சிறையிலே மேற்கொண்ட இன்னல்களை ஒரு நொடியிலே மறந்துவிடத்தக்கவிதத்தில், நமது இதயத்திலிருந்து எழுந்திடும் அன்பினைச் சொரிவோம் என்ற உணர்ச்சி கொள்பவர்களும்,