பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

உரத்தகுரலில் முழக்கமிடுகிறார்கள், ஜனநாயக சோஷியலிசம் என்று.

பெரும்பெரும் நிலப்பிரபுக்களும், கோடீஸ்வரர்களான தொழிலதிபர்களும், வெளிநாட்டு முதலாளிகளுடன் கூட்டாகப் பெருந்தொழில் நடத்துபவர்களும், காங்கிரசில் கூடி நின்று, ஜனநாயக சோஷியலிசம் பேசுவது, இருபதாம் நூற்றாண்டின் இணையிலாத அரசியல் மோசடி என்று நான் சொன்னால், கடுமையாகக் கூறிவிட்டேன் என்று யாரும் எண்ணிக் கோபிக்கக்கூடாது—எத்தனையோ வார்த்தைகளை கடுமை என்பதற்காக வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு, கடைசியாக நான் பயன்படுத்தியிருப்பது மோசடி என்ற வார்த்தை. அதைவிட நாகரிகமான வேறு வார்த்தை கிடைக்கவில்லை, இந்த நிலைமையை விளக்க. எனக்கு எவரையும் புண்படுத்த விருப்பம் ஏற்படுவதில்லை—திருடனைக்கூட நான் நடுநிசி உழைப்பாளி என்று கூறத்தயார். ஆனால் இந்த நிலைமையை விளக்க ‘மோசடி’ என்ற பதத்தைக்கூட உபயோகிக்கா விட்டால், உண்மையைத் துளியும் விளக்கிட முடியாது.

இந்த அரசியல் மோசடி நடத்தப்பட வேண்டியதற்காகவே, முரண்பட்ட கருத்துகளைக் கொண்டவர்கள், காங்கிரஸ் முகாமில் இருக்கிறார்கள்—ஒவ்வொரு அடிப்படைப் பிரச்சினையின்போதும், முரண்பாடு நெளிகிறது. முடிவிலோ, எவருக்கு எந்த நேரத்தில் வலிவு மிகுந்திருக்கிறதோ அவர் பக்கம் அனைவரும் நிற்கின்றனர்; எந்த நேரம் பார்த்துக் கவிழ்த்துவிடலாம் என்ற நினைப்புடன்.

எனவே, கருத்து வேறுபாடும். அதனைத் தாராளமாக வெளியிடுவதும் எமது ஜனநாயகத்தின் மாண்பு என்று மார்தட்டிக் கூறுபவர்கள் கிளம்பும் போது, இதனை நினைவிலே கொண்டிட வேண்டுகிறேன்.

இனித் தம்பி! இத்தகைய அடிப்படை விஷயத்திலேயே அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் ஆளுக்கு ஒரு விதமாக, முரண்பட்டுப் பேசுகிறார்களே, இதனை ஜனநாயகப் பண்பு என்று கூறுபவர்களைக் கேட்டுப் பாரேன், இந்த அளவுக்கு வேண்டாம், மிகச் சாதாரணமான அளவுக்கு,—இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சினையில் அல்ல, மிகச் சாதாரணப் பிரச்சினையில்—வேறு கட்சி-