பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

நாட்டு மொழி, பாட்டு மொழி, வீட்டு மொழி என்றெல்லாம் பிறர் பேசுகிறார்கள், விரிவுரையாற்றுகிறார்கள், போற்றுகிறார்கள். புகழாரம் சூட்டுகிறார்கள், எனினும் வேற்றுமொழி வேங்கை எனப் புகுவதுகண்டு விரட்டிட முன்வருகிறார்களில்லை. இந்த இளைஞர்களோ, எமது மொழியை அழித்திடவும், எமது வாழ்க்கை நிலையினைக் கெடுத்திடவும் வந்திடும் இந்தியினை எத்தனை இன்னல்கள் எமைத்தாக்கிடக் கிளம்பிடினும், எதிர்த்தே நிற்போம் என்று சூளுரைத்துச் செயல்படுகின்றனரே; இத்தகையார் ‘இரண்டாங்கட்டிலும்’ இன்பத் தமிழ் அழிப்பார் கூடத்திலும் இருந்திடும் நிலை உளதே; இந்தக் கொடுமையினை மாற்றிடும் நன்னாளே, பொன்னாள், அது எந்நாள், எந்நாள்? என்று ஆவலுடன் கேட்ட வண்ணமுள்ளனர் பல்லாயிரவர்.

தம்பி! சிறை சென்று திரும்பிடும் தோழர்களில் பலருக்கு உடல் நலிவு இருந்திடக் காண்கிறேன்—நானே அப்படித்தான்—ஆனால் உள்ளப்பாங்கோ! நாம் தூய்மையான, தேவையான, நியாயமான ஒரு அறப்போரில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற எழுச்சிமிகு எண்ணத்தை உள்ளம் ஏந்திக்கொண்டிருக்கக் காண்கிறேன்—பெருமிதம் கொள்கிறேன்.

சிறையிலே உடல்நலக் குறைவு ஏதேனும் ஏற்பட்டதோ?—என்று கேட்கிறேன், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் அவர்களை—அவர் இளைஞர் அல்ல — அவர் கூறுகிறார், “அதெல்லாம் இல்லை இருந்தாலும் பரவாயில்லை”— என்று; கூறும்போது முகத்திலே புதியதோர் பொலிவு மலரக் காண்கிறேன். மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்த அன்பில் தர்மலிங்கம்—இன்றும் முழு அளவு நலம் பெற்றுவிட்டார் என்று கூறுவதற்கில்லை — அவரைக் கேட்கிறேன் என்ன? என்று, “ஒன்றுமில்லை! நன்றாக இருக்கிறேன்” என்கிறார்; வழக்கமாக அவர் பார்வையிலே ஒரு மிரட்சி தெரியும், இப்போது ஒரு புதுவிதக் கனிவே பிறந்திருக்கிறது சிறைச்சாலை அறச்சாலையாகி விட்டிருக்கிறது, தம்பி! அங்குச்சென்று திரும்பியவர்கள் செந்தமிழ்க்குத் தீமை வந்த காலை நாம் நம்மாலான செயலினைச் செய்தோம் என்ற உணர்ச்சி பொங்கிடும் நிலை பெற்றுள்ளனர். அறப்போர் வெற்றி ஈட்டித் தருகிறது என்பதற்கு இதனைச் சிறந்ததோர் சான்றாக நான் கொள்கிறேன். சிறைக்கஞ்சா உள்ளமும், சிறைக் கொடு-