பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மைகளைக் கண்டபிறகும் சலிப்புப் பெறாத மனமும் ஏற்பட்டுக்கொண்டு வருவது, கழகத்திற்குக் கிடைத்திடும் புதியதோர் கருவூலமென்பேன்.

இத்தகைய அறப்போர் வீரர்தம் மனப்போக்கு பற்றியே ஆங்கிலக் கவிஞரொருவர்,

கருங்கற் சுவரும் காவற் கூடமாகுமோ
இரும்புக் கம்பியும் பெருஞ் சிறையாகுமோ
தூய்மை மனத்தன் விடுதலை வீரன் புகும்
சிறைச்சாலை தானும் அறச்சாலை ஆகுமே.

என்று கூறினார்.

இத்தகைய மனப்பான்மையின் மாண்பினை அறிந்து கொள்ள இயலாதார் கடாவுகின்றனர், “போராட்டமா! எப்போது வெற்றிபெறும்” என்பதாக.

காகிதத்தால் பூ செய்து, அதற்குக் கவர்ச்சிமிகு வண்ணம்பூசி, சிறிதளவு நறுமணமும் தடவி, அங்காடிக்குக் கூடை கூடையாகக் கொண்டு செல்வது எளிது—நேரமும் அதிகம் பிடிக்காது. ஆனால் அதனை எவர் கொள்வர்? எதற்கு அது பயன்படும்? காகித மலர்க்குவியல் கடை நிரம்ப வைத்திருக்கின்றேன், காணவாரீர்! பெற்றுச் செல்வீர்! பெருமகிழ்வு கொள்வீர்! என்று கூவிக்கூவி விற்றாலும், அந்த இடத்தைப் பூக்கடை என்று எவரும் கூறிடார். எளிதாகச் செய்திடக் கூடியது காகிதமலர்—மல்லியும் முல்லையும், மருக்கொழுந்தும் பிறவும் எளிதிலே கிடைத்திடத்தக்க முறை இல்லை. பாத்தி எடுத்து, பண்படுத்தி, பதியம் வைத்து, பலநாள் பாடுபட்ட பிறகே, மலர் கிடைத்திடும். கரத்திலே முள்தைக்கும், காலிலே கல் தாக்கும், கோடையின் கொடுமை. மாரியின் மருட்டுந்தன்மை என்பவைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும். மணமிகு முல்லை பெற; கிடைத்திடின் மணம் இனிமை தரும், கிடைக்கு முன்பு பொறுமையுடன் வேலை செய்தாக வேண்டும்.

நாம் மேற்கொண்டுள்ள செயல், காகிதப்பூ செய்திடுவது போன்றது அல்ல; முல்லை பூத்திடும் பூங்கா அமைப்பது போன்றதாகும். பல்வேறு வகையான வலிவினைத் தேக்கி வைத்துக்கொண்டு, துரைத்தனத்தார், இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துகின்றனர்; அதனை எதிர்க்கும்