பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

புனிதப் பணியாற்றிடப் பழையபடி ஆலயம் சென்றிடுக என்று அவர்கட்குக் கூறி அனுப்பிவிட்டார். உளவறியும் படை, போலீஸ் படை, கட்சித் தொண்டர் படை ஆகியவைகளால் சாதிக்கமுடியாத செயலைச் செய்திடச் சாதுக்கள் படையினால் முடியும் என்று நம்பிடும் நந்தா, அதே சாதுக்களால் மட்டுமே ஒழுங்கான, ஊழலற்ற ஆட்சி நடத்தமுடியும் என்ற நம்பிக்கையும் கொள்ள ஏன் தயங்கப்போகிறார்? அதனால்தான் கட்டுரையாளர் கூறினார், இனி, சர்க்காரின் நிர்வாக அலுவலகங்களில், —வெளிவிவகாரத் துறையிலும்-சாதுக்களே நியமிக்கப்படும் காலக்கட்டம் பிறந்திடக்கூடும் என்று.

மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், ஆசியப் பகுதியில் உள்ள சில முக்கியமான தூதராலயங்களிலும், சாதுக்களே கொலுவிருக்கக்கூடும்—எதிர்காலத்தில்—பழமையை நோக்கி நடந்திடும் எதிர்காலத்தில்!

என்று கூறியிருக்கிறார், கட்டுரையாளர்.

முற்போக்காளர்கள், இதனை ஏளன மொழி என்பர்; ஆட்சிப் பொறுப்பில் உள்ளார் இதனை எரிச்சல் மூட்டும் பேச்சு என்பர்; கேலி செய்து அறிவு புகட்டும் நேர்த்தியான முறையிலே அமைந்த பேச்சு இது என்று நான் கருதுகிறேன்.

சாதுக்கள் இவ்விதம் சகல துறைகளையும் நிர்வகிக்கக் கிளம்பிடும் போக்கை வகுத்திட முற்படுவது பிற்போக்குத்தனம் என்று கண்டித்திடும் இக்கட்டுரையாளர், இன்று சகல துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டுள்ள நிர்வாக முறை சிறந்ததாக இருக்கிறது என்று கூறவில்லை—அதிலே காணப்படும் தவற்றையும் கண்டிக்கிறார்—கேலி மொழியால்.

சாதுக்களை வெளிநாடுகளில் தூதராலயங்களில் நியமிப்பது நல்லதுகூட

என்கிறார். இதென்ன, சாதுக்களை நியமிக்கலாம் என்று பரிந்துரைப்பதுபோல் தோற்றமளிக்கிறதே இந்தப் பேச்சு என்று எண்ணி ஆயாசப்படுவீர்கள். ஆனால், இன்றுள்ள நிலையைக் கேலி செய்யவே இது போல் கூறுகிறார்.