138
இன்று தூதராலய அதிபர் தூங்கி விழுகிறாரல்லவா, தாம் அளித்திடும் விருந்துகளின்போது, அதனை விட மேலாக இருக்குமல்லவா, சாது, அதிபர் ஆனால்! ஆசியப் பகுதியிலே வேலை பார்க்கச் சொன்னால் மறுத்துவிடுகிறார் அல்லவா, தூதராலய அலுவலர்; மனைவி, பாரிஸ் அல்லது ரோம் நகரில் வாழ்ந்திடவே விரும்புகிறார் என்ற காரணத்துக்காக, அதைவிட மேல்தான், சாது தூதராலய அலுவலராகிவிடுவது.
சாதுவுக்குக் குடும்பம் இல்லை, எனவே, சுக வாழ்வுபற்றிய நினைவு எழக் காரணமில்லை.
விருந்தளிக்கமாட்டார்; வாழ்க்கைச் சுவையால் வசீகரிக்கப்பட்டு வீழ்ந்திடமாட்டார். ஏனெனில், வாழ்வே மாயம்! என்பதல்லவா, சாதுவின் சித்தாந்தம்!!
கடுங்குளிர் தாக்கிடும் இடங்களில் மட்டுமே சாது அதற்குத்தக்க உடை அணிந்திடுவார்; பருவமாற்றத்தின் விளைவுகளையும் கட்டுப்படுத்திவிடுவாரேல், உடைச் செலவும் இல்லை! சர்க்கார் பணம் விரயமாகாது.
நிர்வாகத் துறையில் சாது இடம்பெற்று விடுவாரானால், மகத்தான மாறுதல் ஏற்படுத்தி விடுவார்—நாட்டவர் அனைவரும் சமாதி நிலை அடைவர்!
விழித்தெழுந்திடும்போது, செத்துக்கிடப்போம், அல்லது நாம் சமாதி நிலையில் இருந்த போது நாட்டைப் பிடித்துக்கொண்ட வேற்றவரின் காலின் கீழ் சிக்கிக்கிடப்போம். இருப்பினும், சாது மனப்போக்கின் காரணமாக இதனைப் பொருட்படுத்த மாட்டோம்; நடப்பது நிசமல்ல, நமக்கல்ல என்று எண்ணிக் கொள்வோம்.இவ்விதமாகத் தம்பி! இன்றுள்ள நிலையையும், எதை நோக்கி நாம் இழுத்துச் செல்லப்படுகிறோமோ அந்த நிலையையும், மாறிமாறித் தாக்குகிறார்; முரட்டுத்தனமான தாக்குதல் அல்ல; மிக நேர்த்தியான முறையில்; உயர்தரமான நையாண்டி நடையில்.