பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

உணவுப் பிரச்சினை குறித்துக் காங்கிரஸ் மேற்கொள்ளும் நடவடிக்கை சரியானதாக, பலன்தரத்தக்கதாக இல்லை என்ற கருத்தினையும் கட்டுரையாளர் விளக்கிவிட்டு, அதன் தொடர்பாக, சாதுக்கள் பற்றிய நையாண்டியை மேலும் தருகிறார்.

உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தநேரம், சாதுக்களை நாம் நாடிடப் பொருத்தமான நேரமே! உணவு நெருக்கடி போக்கிட உற்பத்தியைப் பெருக்குவது, இறக்குமதி செய்வதுகூடத் தேவைப்படாதல்லவா! (உபவாசம் இருந்திட) உணவு தேவை இல்லை என்று கூறிடத்தக்க நினைப்பு அருளுவர் சாதுக்கள்!!

சாதுக்களை நாடி அவர் துணையுடன் துரைத்தனம் நடத்த முனைந்து விட்டோமானால் உலகில் நமது நாட்டுக்குத் தரப்பட்டுள்ள இடம் என்ன என்பது பற்றியோ, காமன் வெல்த் மாநாட்டிலே நாம் பின்வரிசையில் தள்ளப்பட்டுக் கிடந்திட நேரிட்டது பற்றியோ, உலக நாடுகளிலே நமக்கு உற்ற நண்பர்களாக அதிகம்பேர் இல்லை என்பது பற்றியோ ஆப்பிரிக்க பூபாகத்தில் சீனா பாசவலை வீசுவது பற்றியோ, காஷ்மீர் குறித்துத் தான் கொண்டுள்ள போக்கே நியாயமானது என உலகினை நம்பவைத்திடப் பாகிஸ்தான் எல்லா விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவது பற்றியோ நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்! உலகம் உண்மை என்று எண்ணுபவர்கள் இவைபற்றி எண்ணிக் கவலைப் படட்டும். (சாதுக்களால் நடத்திச் செல்லப்படும் நிலைபெற்ற) நமக்கு உலகம் வெறும் புகை! மாயம்! உலகை மறந்திடுவோம். உலக விஷயம் குறித்து எண்ணிக் காலத்தை வீணாக்குவானேன்!!

இவ்விதம் கிண்டல் செய்கிறார் நயனதாரா! சாதுக்கள் ஒரு நாட்டின் அரசினை நடத்திச்செல்ல இடமளித்தால் மக்கள் என்ன கதி பெறுவர் என்பதனை எடுத்துரைக்கிறார்.

உலகம் மாயை, வாழ்வு அநித்யம் என்ற நம்பிக்கையும், உண்டு உலவிட வேண்டும் என்று எண்ணாமல் உபதேசம் கேட்டுச் சமாதிநிலை அடைய வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட சமூகமாக்கப்பட்டு விடுவோம், சாதுக்களைத் துரைத்தனம் நடத்தச் சொன்னால்