7
நம்மிடம், தூய்மையும் நேர்மையும், அஞ்சாமையும் துவளாமையும். அவசரப்படாத தன்மையும், நம்பிக்கையும் படைக்கலன்களாக உள்ளன. இந்த இருதரப்புக்கும் இடையில் எழும் ‘போராட்டம்’, முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டிடும் மாயத்தைத் துணைகொண்டது அல்ல; பிடி சாபம்! என்று சபித்திடும் தபோபலத்தைத் துணைக்கொண்டதும் அல்ல. தொடர்ந்து பணியாற்றுவது, துவளாமல் கிளர்ச்சி நடத்துவது, பொறுப்புடன் அறப்போர் நடாத்துவது எனும் முறையில் அமைந்திருப்பது. வெள்ளியன்று விதை தூவி செவ்வாயன்று அறுவடை செய்திடும் விதமாக ஒரு விசித்திர வெற்றியை இதிலே, ஏமாளிகளன்றிப் பிறர் எதிர் பார்க்கமாட்டார்கள். காலம் வரவேண்டும்; காலம் கனியவேண்டும்: காலத்தைக் கனிந்திடச் செய்யவேண்டும், வெற்றியை ஈட்டிட. தம்பி! நமது தோழர்களின் தியாக உணர்வு, காலத்தைக் கனிந்திடச் செய்யும் என்பதிலே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது; நான் சிறைமீண்டு, கலந்துகொண்ட விழாக்கள் என் நம்பிக்கையை மேலும் வலுவுள்ள தாக்கி இருக்கிறது.
ஒரு இயக்கம், எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள, சில காலத்திற்கெல்லாம் பயிற்சி பெற்றுவிடும், பக்குவம் பெற்றுவிடும் ஆனால், ஏளனத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்போக்கு எளிதில் வளராது; அதிலும் எதையேனும் மென்று தின்றபடி காலத்தைக் கொன்று கிடப்பவர்கள், இடம் தமதாக ஏதேதோ செய்து பார்த்துக் கிட்டாது போகும்போது எட்டடுக்கு மாடியிலே பெட்டி தூக்கும் வேலையேனும் பெற்று, மேலிடம் சென்றுவிட்டேன் என்று நாநடம்புரிபவர்கள், ஏளனமொழியினை எடுத்து வீசிடும் போது, கனகமணிக் கட்டிலிலே படுத்துத் துயிலும் காதற்கிழத்தியையும் அவள் ஈன்ற கனியையும் விட்டுப் பிரிந்து, காரிருளில் கானகம் சென்று, ஊர் அழிக்கப் புறப்பட்ட கடும் புலியை வேட்டையாடச் சென்றிடும் வீரன்போல, இனிக்க இனிக்கப்பேசி, இல்லமதில் இருந்திட வாய்ப்பும் வசதியும் நிரம்பப் பெற்றிருந்தும், கடுஞ்சிறை ஏகியேனும் கன்னித் தமிழ் காத்திடுவோம் என்று கடமை உணர்ச்சியுடன் பணியாற்றி வருபவரை ஏளனம் பல பேசிடும் போது, தாங்கிக்கொள்வதென்பது மிகமிகக் கடினம்— ஆனால், தாங்கிக் கொண்டாலன்றி அந்த இயக்கம் தணலில் தங்கம் போலாவது முடியாது—ஆகவே,