இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று நான் கூறிய போது கேட்டுக் கொதித்தவரும் கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்றவரும் உண்டு—என்றாலும், என்னிடம் அவரெலாம் கொண்டுள்ள உள்ளன்பு காரணமாக, என்ன செய்வது! சொல்கிறான் அண்ணன்! சோற்றுத் துருத்திகளின் சொல்லம்பைத் தாங்கிக்கொள்வோம்! என்று முடிவெடுத்து, தாங்கிக்கொள்ளும் உரம்பெற்றுவிட்டனர். நமது கழகம் இந்தக் கட்டம் சென்றிருப்பதனை நான் மிகமிக முக்கியமானதாகக் கொள்கிறேன்.
- ஏளன மொழி எரிச்சலூட்டும்—எரிச்சல் நம்மைச் சுடுசொல் வீசிடுவோராக்கிவிடும்—சுடுசொல் வீசிடினோ, நாம், சோர்வகல மது அருந்திட முனைவோன் இறுதியில்தானே மதுக்குடமாகிடுதல்போல, சுடுசொல் வீசிட முனைந்துவிட்டால், தெளிவு, கனிவு, அறம், அன்பு, நெறி, நேர்மையாவும் பட்டுப்போய் விடும். குறிக்கோள் கெட்டுப்போய்விடும், நாடு நம்மைக் கைவிட்டுவிட்டு, இவனும் காட்டானாகத் தான் இருக்கிறான்! ஆந்தை அலறுவதை ஆயிரமுறை கேட்டிடினும் குயில் தன் குரலோசையை மாற்றிக் கொள்கிறதா! எவரெவரோ ஏளனமொழியில் பேசுகிறார், ஏசுகிறார் என்பதற்காக, இவர்கள் வெகுண்டு அதே முறையை. அதே மொழியை மேற்கொள்வதா? மேற்கொள்கிறார்கள் எனின், இவர்கள் அவர்கள் போன்றார் என்பதன்றி வேறென்ன கூறமுடியும் என்று தீர்ப்பளித்திடும். நமது தோழர்கள் இந்தத் தெளிவு பெற்றதால், தூற்றுவோர் தூற்றட்டும், அதிலும் இவர்கள் துதிபாடிக்கிடந்தவர்கள் இன்று தூற்றித் திரிகிறார்கள், இதனை நாம் பொருட் படுத்தத் தேவையில்லை, அவர்கள் நாப்பறை கொட்டட்டும், நாம் நமது யாழொலியைக் கெடுத்துக் கொள்ளலாகாது என்ற உறுதிபெற்றுவிட்டனர்.
எதிர்ப்பு, ஏளனம் எனும் இரு கூராயுதங்களும் முனை மழுங்கிப் போய்விட்டதனை, தம்பி! நாமே காண்கின்றோம்; களிப்பும் கொள்கின்றோம். சிலர், தமது முறை பலன்தரவில்லை என்பதனை அறிந்தும், வேறு முறை அறியாத காரணத்தால், பொய்த்துப்போன முறையையே மேற்கொண்டுள்ளனர்—இன்னமும். மக்கள் விரும்பவில்லை, கொள்ள மறுக்கின்றனர் என்பதை