பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

முடன் அழகு தவழ் உருவினரும், அலைக்கு இரையாகிப் போயிருப்பர்! அரும்புகள் பலப் பலவும் அழிந்திருக்குமே. தள்ளாடும் நடையெனினும், தாத்தா! என்றழைத்திடும் மழலை மொழிக் குழவியுடன் மாதரசியும் மகனும் இருக்கின்றான் என்ற எண்ணம் களிப்பளிக்க இருந்து வந்த பெரியவர்கள் பற்பலரும் மடிந்திருப்பர், உயிர் குடியா முன் மடிந்திடேன் என உரைத்து எழும்பி வந்த அலைகளாலே! என்னென்ன நடந்திருக்கும், எத்தகு ஓலம் எழும்பியிருந்திருக்கும், உயிர் தப்ப ஏதேது முயற்சிகளைச் செய்திருப்பார், எல்லாம் பயனற்றுப் போயின என்றுணர்ந்து, இறுதியாய், இதயத்திலிருந்து அலறல் எவ்விதத்தில் பீறிட்டுக் கிளம்பி வந்திருக்கும் என்பதனை எண்ணிடும்போதே, உள்ளம் நைந்துவிடுவது போலாகிறது, என் செய்வோம்; பேரிழப்பை எண்ணி, பொங்கிடும் கண்ணீரல்லால், தந்திட வேறென்ன உண்டு; பொறுத்துக்கொள்க என்று, இழந்தனனே என் மகனை! இழுத்துச் சென்றதுவே என் அரசை! வாழ்வளிக்க வந்தவனை வாரிக் கொடுத்துவிட்டுப் பாழ்மரமானேனே, பாவி நான்! என்றெல்லாம், பதறிக் கதறிடுவோர்க்கு அவர் ஓலம் கேட்டு. காலம் மூட்டி விட்ட கொடுமையிது எனக்கூறி, கண்ணீர் சொரிவதன்றி, பிறந்தவர் இறந்தே போவர், இறப்பும் ஓர் புது வாழ்க்கையின் பிறப்பாம் என்றெல்லாம் ‘தத்துவம்’ பேசிடவா இயலும்? நாமென்ன, முற்றுந்துறந்துவிட்டோம் என மொழியும் முனிவர்களோ! இல்லையன்றோ! இருந்தான் பலகாலும், பெற்றான் பல நலனும் நோய் வந்துற்று மறைந்தான், மறையுமுன் மாடு மனையுடனே மகிழ்ந்திருக்கும் விதமாகப் பெரியதோர் குடும்பத்தை அமைத்தான் சீராக என்று கூறிடத்தக்க நிலையினிலே இறந்துபடுவோர்க்காகக் கூட இதயமுள்ளோர் கண்ணீர் சிந்திடுவர். கவலைகொண்டிடுவர். தெற்கு முனையிலே நேரிட்ட பேரிழப்புக் கண்டோம், மரணம் இயற்கை என்று கூறி எங்ஙனம் ஆறுதல் பெற இயலும்! இது, எந்தமிழ் நாட்டினிலே, என்றும் நடந்திராத, சிந்தையை வெந்திடச் செய்யும் பெருவிபத்து. பேரிழப்பு! ஆறுதல் கூறுவதோ, பெறுவதுவோ எளிதல்ல.

கொடும் அலைக்குப் பலியானோர் விட்டுச் சென்ற குடும்பத்து மற்றவர்கள் தம்மை நம் உற்றார் உறவினர் என்று கொண்டு, அழித்தது அலை, அரசு அணைத்தது என்றவர் எண்ணும் வண்ணம், உயிர் குடித்தது அலை