பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வடிவிலே வந்த கொடுமை, வாழ்வளித்தனர் அன்னையாகி இவ்வரசு எமக்கு என்று கூறத்தக்க விதத்தில் அரசு திட்டமிட்டுத் தக்கனவற்றை விரைந்து செய்தளிக்க வேண்டும். நாட்டினர் அனைவருமே, ஒருமித்துக் கேட்டிடுகின்றனர் அரசை, வீடிழந்து, தொழிலிழந்து, பெற்றோர் உற்றார் இழந்து, பெற்றெடுத்த செல்வந்தனை இழந்து அழுது கிடக்கின்ற மக்களுக்கு, புதுவாழ்வு, முழுவாழ்வு நல்வாழ்வு அளித்திட, பொருள் அளவு அதிகமாமே என்றெண்ணி மருளாமல், பரிவுடன் அவர் நிலையைப் பார்த்து, நலன்தேட முனைந்திடுதல் வேண்டும் என்று. அழிவு ஒரு நாள், அழுகுரல் ஆறுநாள், வேண்டுகோள் ஒருநாள், ஆகட்டும் பார்க்கலாம் என்று சிலநாள், பிறகு ‘அதது அததன்’ வழிப்படி சென்றிடும் என்ற முறையிலே எண்ணத்தை ஓட விட்டுவிடாமல், தமிழக மக்கள் மனம் குளிர, பிறநாட்டவரும் கேட்டு மகிழத்தக்க விதத்தில், அரசு செயலாற்ற வேண்டுகிறோம். செய்வர் என்று எண்ணி, அந்த நம்பிக்கை தன்னையே ஒளியாக்கிக் கொண்டு, இருண்ட கண்களில் அதனை ஏற்றி, விழாவினுக்குரிய இந்நாளில், தமிழகத்தோர்க்கு என் கனிவுமிகு வாழ்த்துக்களைச் செலுத்துகின்றேன்.

அணைத்த கரம் அடிக்கிறது, ஆனால், அடித்தது போதுமென்றெண்ணி மீண்டும் அணைத்துக்கொள்கிறது போலும். தம்பி! இயற்கையாள் தந்திடுவனவற்றைப் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற்று, சிலர் மட்டும் வாழ்ந்திருத்தல், நன்றன்று. நாம் எவைஎவை பெற்று இன்புற்றிருக்கின்றோமோ, அவை தமை அனைவரும் பெற்று மகிழ்ந்திடுவதே முறை, அதற்கே உளது இயற்கைச் செல்வம். பொங்கற் புதுநாளன்று இக்கருத்து நம் நெஞ்சில் ஏற்கவேண்டும், ஊறவேண்டும். கனியெலாம் சிலருக்கு, காய்சருகு பலருக்கு; ஒளியில் சிலர், பாழ் இருளில் பலர்; வாழ்வார் சிலர். வதைபடுவார் பலர்; எனும் நிலைகாண அல்ல; இத்தனைக் கோலம் காட்டி எண்ணற்றனவற்றை ஈந்து, என்றும் இளமையுடன் இயற்கையாள் கொலுவீற்றிருப்பது. அதிலும் தம்பி! இன்பத் தமிழகத்தினிலே, இயற்கையாள் தீட்டிவைத்துள்ள கோலம், எண்ண எண்ண இனிப்பளிப்பதாக உளது. நா மணக்கப்பாடிய நற்றமிழ்ப் புலவோரின் பாக்களில் காண்கின்றோம், பற்பல படப்பிடிப்பு.