பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

இயற்கைப் பொருள் ஒவ்வொன்று பற்றியும் மிகுந்த நுண்ணறிவுத் திறனுடன் புலவர்கள் கூறியுள்ளனர்; மலை, மரம், மடுவு, அலை, அடவி, கலம், புலம், அருவி, வாவி, குளம், எனும் எவை பற்றியும் அந்நாளில் தாம் கண்டனவற்றைச் சுவைபட எடுத்துக் கூறியுள்ளனர் புலவர் பெருமக்கள். இயற்கையின் எழில், அந்த எழிலைக் காட்டும் பலவடிவங்கள், வகைகள் இவை மட்டும் காணக்கிடைக்கும் பட்டியலல்ல அந்தப் பாக்கள். விளக்கின் ஒளி கொண்டு வேறு பொருளைக் காட்டிடும் பான்மைபோல, இயற்கைப் பொருள்களைக்கொண்டு, இன்னுரை, நல்லுரை, வாழ்வு முறை என்பனவற்றை எடுத்துக் காட்டியுள்ளனர். இவையாவும், தம்பி! அன்றோர் நாள்!! இன்று அந்த ‘அந்தநாள் சிறப்பினை’ மீண்டும் கண்டிட ஓர் சீரிய முயற்சியினில் ஈடுபட்டுள்ளனர் இந்நாளில். விழிப்புற்ற, கற்ற தமிழ் மறவாத, மரபழிக்கும் மாபாதகம் வெறுத்திடும் தமிழ்ப் புலவோர். இடையிலேயோ! உயர உயரச் சென்றுவிட்டோம்! கொண்டு சென்று விட்டனர் தமிழர்களை! முல்லை பறித்திடச் சென்ற மங்கையை, வேழம் விரட்ட விருது பெற்ற வீரன் கண்டனன் என்ற கதை கூறினரன்றோ அந்தநாள் புலவோர்! ஓ! ஓ! இது மட்டுந்தானோ கூற இயலும் இவர்களால், நாம் கூறுகின்றோம் கேளீர் ‘மேல் உலக’க்காதை என்று அழைத்தனர் இடையில் வந்தோர்; பாரிஜாதம் காட்டினர், பாற்கடல் காட்டினர், பாசுபதம் காட்டினர், பற்பல விந்தைகளைக் காட்டினர், தமது கதைகளில்! உள்ளதை மறந்தனர் தமிழர்! உருவாக்கப்பட்டனவற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். அதன் காரணமாகவே, பல்வேறு விழாக்கள்—பண்டிகைகள்—தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்டன. பொங்கற் புதுநாள் அது போன்றதல்ல, இது நமது விழா; நம்மை நாம் உணர உதவும் விழா; இடையிலே படர்ந்தனவற்றை நீக்கி, தமிழரின் உள்ளத்தை மாசறு பொன்னாக்கி, ஒளிவிடு முத்து ஆக்கிடத்தக்க நன்னாள். பொங்கிற்று! பொங்கிற்று! பொங்கலோ பொங்கல்! என ஒலி எழுப்பி விடுவதனால் மட்டும் அல்ல! நான் முன்னம் கூறியுள்ளபடி, பொருள் உணர்ந்து பாடம் பெறுவதனால்!!

பெற வேண்டுவனவற்றைப் பெற்றிடும் முயற்சியில் ஈடுபடுவதிலே ஏற்படக்கூடியது ஆர்வம்; இருந்ததை, இடையில் இழந்ததை மீண்டும் பெற்றிட எடுத்துக்