158
கொள்ளப்படும் முயற்சி இணையற்ற எழுச்சியை ஊட்டி விடுமன்றோ? அந்த எழுச்சிபெற்ற நிலையில், பொங்கற் புதுநாளை, புதுமையினைச் சமைத்திடும் பேரார்வம் பொங்கிடும் நாளாகக் கொண்டுள்ளனர். எனவேதான் தம்பி! நாட்டு வளம்பற்றி, மக்கள் நிலை குறித்து, அரசு முறைபற்றி, அறநெறி குறித்து, தாழாத் தமிழகம் என்ன கருத்துக் கொண்டிருந்தது என்பதனைக் கண்டறியும் ஆர்வம் மிகுந்துளது. இந்த ஆர்வத்தை மேலும் பெற்றிடச் செய்திட வேண்டும், பொங்கற் புதுநாள். இயற்கைச் செல்வம் இத்துணை பெற்றிருந்த இன்பத் தமிழகத்தில் இன்னல் கப்பிக் கொண்டிருக்கக் காரணம் என்ன என்று கண்டறிய வேண்டாமோ? கண்டறிய, உலகின் பல்வேறு இடங்களிலே இயற்கையாள் அளித்துள்ளன யாவை? ஆங்கு உள்ளோர் அவற்றினை எம்முறையில் பயன்படுத்தி ஏற்றம் கண்டுள்ளனர்? அம்முறையில், நாம் பெறத்தக்க அளவு யாது? பெற்றிடும் வழி என்ன? என்பனவற்றை அறிந்திட வேண்டுமன்றோ? வேண்டுமாயின், உலக நாடுகளின் வரலாற்றினை ஓரளவாகிலும் நாம் அறிந்திட வேண்டுமே? அறிகின்றோமா? மாலை நேரத்தில் மாபெரும் நகரங்களில் கூடி மக்கள் கூட்டம் இதுபோது பல்வேறு நாடுகளின் வரலாறுபற்றிய விரிவுரையையா கேட்டுப் பயன் பெற்று வருகிறது! இல்லையே! போகப்போகும் இடம்பற்றிய கதைகளை அல்லவா, இருக்கும் இடத்திலே இடரும் இழிவும் நீக்கிடும் முயற்சியை மேற்கொள்ளாத மக்கள் கேட்டு இன்புறுகின்றனர். இந்நிலையில் நாட்டவர் இருந்திடின், உலகின் நிலையினை உணர வழி ஏது, உணர்ந்து நம் நாட்டை நமக்கேற்ற நிவையின தாக்கிடும் முயற்சியில் ஈடுபடுவது ஏது?
இங்கு வயலின் அளவு மிகுதி, விளைச்சலின் அளவு குறைவு என்கிறார்கள்,
பொருள்கள் இங்கு மிகுதியும் பெற்றிடலாம்; ஆனால் பெற்றோமில்லை என்கிறார்கள்.
பெருகிடும் பொருளைக்கூட. சீராகப் பகிர்ந்தளித்தால் சமூக நலன் மிகும்; செய்யக் காணோம் என்கின்றார்கள்.